Skip to main content

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியா வருகை!

Published on 21/04/2025 | Edited on 21/04/2025

 

US Vice President JD Vance visits India

அமெரிக்கா அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை வீழ்த்தி, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, அதிபர் பதவியேற்பு விழா கடந்த ஜனவரி 20ஆம் தேதி (20.01.2025) இரவு இந்திய நேரப்படி 10:30 மணியளவில் நடைபெற்றது. அதன்படி அமெரிக்காவின் 50வது துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 47வது அதிபராக, டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியாவிற்கு இன்று (21.04.2025) காலை 10 மணியளவில் வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவி உஷா வான்ஸ், தங்கள் குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள பாலம் விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவருக்கு மத்திய அரசு சார்பில் பாலம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்கப்பு அளிக்கப்பட்டது. அவரை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியை துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இன்று மாலை சந்தித்து பேச உள்ளார். முன்னதாக துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி, குழந்தைகளுடன் அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்திய பயணம் குறித்து மத்திய  வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்க தூதுக்குழுவிற்கு ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தார். டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவை உள்ளடக்கிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்   அதிகாரப்பூர்வ இந்திய பயணம்  (ஏப்ரல் 21 – 24) இந்தியா - அமெரிக்கா  இடையிலான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்