அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட, திருமழபாடி ஊராட்சியில் கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்கத்தின் சார்பில், 5000 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்கும் வகையில், மூலிகைகள் கலந்த மாப்பிள்ளை சம்பா கஞ்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு கும்பகோணம் நாச்சியார்கோயில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை ஆ. அல்லி, சமூக ஆர்வலர் ஜெயந்தி ஆகியோர் மீண்டும், மீண்டும் பயன்படுத்தக் கூடிய மூலிகை கிருமி நாசினி முக கவசத்தை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க செயலாளர் தங்க. சண்முகசுந்தரம் பொதுமக்களிடையே கூறுகையில், ’’எந்த நோயினையும் கண்டு அஞ்சி தற்கொலை செய்து கொள்வது கூடாது. நோயாளிகளுக்கு தன்னம்பிக்கையினை வழங்க வேண்டும். நோயாளர்களுக்கு வழங்கக்கூடிய முதல் மருந்தே தன்னம்பிக்கைதான். எனவே நோயாளிகளும் கவலை கொள்வதில் எந்தவொரு பலனும் கிடைக்கப்போவதில்லை.
அரசு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தாருங்கள். வெளிநாட்டிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம் நம்மை தனிமைப்படுத்தி வைத்து விட்டார்களே என எண்ணி கலங்க வேண்டாம். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவே, நம் நலனை கருத்தில் கொண்டு சொல்கிறது, அதன்படி நடப்போம், விரைவில் நலம் பெறுவோம், நம்பிக்கையுடன் இருப்போம். தயவுசெய்து யாரும் நோய்களைப் பற்றி வதந்திகளை பரப்பாதீர்கள். மேலும் வதந்திகளை பரப்பியும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை வேற்றுக்கிரக வாசிகளை பார்ப்பது போலவும் கேலியும், கிண்டலும் செய்யாதீர்கள். எனவே தனி மனித விலகலைத் தாண்டி தனி மனிதனை மதிக்கவும், ஒவ்வொரு மனிதனையும் நோய் பாதிப்பிலிருந்து மீட்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், தமிழகத்தை கரோனா போன்ற எந்த நோய்களிலிருந்தும் காப்போம் எனவும் உறுதி மொழி எடுத்துக் கொள்வோம் என்றும் வலியுறுத்தி, அனைவரையும் உறுதிமொழி மேற்கொள்ள வைத்தார். மேலும் மூலிகை மாப்பிள்ளை சம்பா பற்றியும் அதனை தயாரிக்கும் விதம் பற்றியும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறினார்.

இந்த கஞ்சியானது பாரம்பரிய ரகமான சம்பா அரிசியில் ஒரு வகைதான். மிகவும் அதிக நோயெதிர்ப்பு ஆற்றல் சக்தி கொண்டது மாப்பிள்ளை சம்பா அரிசி. இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியினை ரவை பதத்திற்கு அரைத்து அதனை சமையலுக்கு முன்னதாக ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் ஒரு கிலோவுக்கு பத்து லிட்டர் முதல் 15 லிட்டர் தண்ணீர் வீதம் சேர்த்து கொதிக்கவிட்டு, அதில் தோல் நீக்கிய இஞ்சியினையும் மிளகு, சீரகம், பூண்டு எல்லாவற்றையும் நசுக்கி போட்டு, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊற்றி புதினா இலைகளை வதக்கி, மல்லித்தழை போட்டு கொதிக்கவிட்டு தயாரித்து அனைவரும் சாப்பிடலாம்.
இது மணமாகவும் இருக்கும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். இதனால் விரைவில் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது பெருகும். எனவே இதனை உடல் நலிவுற்று இருப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம். எப்போதும் போல இயல்பாக வாரத்தில் ஒரு முறை கஞ்சி தயாரித்து சாப்பிட உடலில் கழிவுகள் தேங்குவது என்பது இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகி கழிவுகள் முறையாக வெளியேறும்.
ஒவ்வொரு விவசாயியும் தங்களது வயல்வெளிகளில் 10 சென்ட் முதல் 20 சென்ட் நிலத்தை மாப்பிள்ளை சம்பா நெல் சாகுபடி செய்து அவரவர் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்த முன் வர வேண்டும். ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற நம் மூத்தோர் பழமொழிக்கேற்ப பாரம்பரிய இயற்கை உணவுகளை உண்டு நலமாக வாழ வேண்டும் எனவும், அரசு உத்தரவுப்படி தனி மனித விலகலை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க தலைவர் இயற்கை மருத்துவர் அரியூர் காசி பிச்சை அவர்கள் பேசுகையில், ‘’ உப்பு நீரில் கைகளை கழுவுங்கள். உப்பு நீரில் எந்த வைரஸும் வாழாது எனவும், வருடத்திற்கு ஒரு முறையாவது கடல் நீரில் குளியுங்கள், உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்பளியுங்கள் அது தொண்டைக்கு இதமாக இருக்கும் என்றும், பிளாஷ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து பழையபடி டீ வாங்க பாத்திரம் கொண்டு சென்று வாங்கப் பழக வேண்டும், துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும், சித்தரத்தை பயன்படுத்த சுரம் சரியாகும். அதிமதுரம் பயன்படுத்த நுரையீரல் சுத்தமாகும். இவை இரண்டையும் பயன்படுத்த கபம் என்று சொல்லக்கூடிய சளியும், சுரம் என்று சொல்லக்கூடிய காய்ச்சலும் சரியாகும் என்றும் இதன் மூலம் மனித குலம் ஆரோக்கியமாவதோடு சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும் என்றும் கரோனா போன்ற எந்த வைரஸ் உருவாக மனித தவறே காரணம் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவர் பழனி கூறுகையில், “மிளகு, சீரகம், கருவேப்பிலை, மல்லித்தழை உள்ளிட்ட மூலிகைகள் கலந்த மோர் பருகலாம். எளிய முறையில் எலுமிச்சை, தோல் நீக்கிய இஞ்சி, வெல்லம், ஏலக்காய் கலந்த பானகம் குடிக்கலாம். மண்பானை தண்ணீர் பயன்படுத்தி இயற்கையான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் நாம் அருந்தலாம். கெமிக்கல் கலந்த குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், இயற்கை பானங்களை அருந்தி நோய் எதிர்ப்பு ஆற்றலை பெருக்கி கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியை திருமழபாடி ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இளையராஜா துவக்கிவைத்து உரையாற்றினார். கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவ சங்க தலைவர் இயற்கை மருத்துவர் அரியூர் காசி பிச்சை, முன்னாள் திருமானூர் ஒன்றிய சேர்மன் எஸ்.ஆர்.எம்.குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் அகிலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
திருமழபாடி கிராம ஊராட்சியைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு வீதி வீதியாக மக்களுக்கு கஞ்சி வழங்க உறுதுணையாக இருந்து உதவினர். இந்நிகழ்ச்சியில் திருமழபாடி ஊராட்சி செயலாளர் தங்க துரை நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியை கிராம வாழ்வியல் இயற்கை மருத்துவச் சங்கம் ஒருங்கிணைத்து இருந்தது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.