Skip to main content

ஆளுங்கட்சி ஆதரவுடன் பெயர் அழிப்பு.. தேர்தல் முன்விரோதம் காரணமா?

Published on 22/04/2020 | Edited on 22/04/2020

உலகெங்கும் கரோனா தொற்று நோய் விவகாரத்தால் ஊரடங்கு அமலில் இருக்கும் வேளையில், அதே கரோனா ஊரடங்கை பயன்படுத்தி, ஆளுங்கட்சியின் ஒத்துழைப்புடன் முன்னாள் தலைவரின் குடும்பப் பெயர்கள் பொறிக்கப்பட்ட பேருந்து நிழற்குடையிலுள்ள பெயர்களை அழித்து தேர்தல் முன் பகையை தீர்த்துள்ளனர் ஒரு தரப்பினர்.

k


 

 nakkheeran app

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகிலுள்ள சங்கராபுரம் ஊராட்சியில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்குகள் எண்ணிக்கையில் தேவி மாங்குடி என்பவர் வெற்றிப்பெற்றதாக முதல் நாளில் அறிவிக்கப்பட்டிருக்க, அடுத்த நாள் அதிகாலையில் ஆளுங்கட்சியின் ஆதரவில் பிரியதர்ஷினி அய்யப்பன் என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

 

k

 

அது எப்படி..? ஒரு ஊராட்சிக்கு இரு தலைவர்கள் இருக்க முடியுமென பிரச்சனை உருவானதால் பிரியதர்ஷினி பதவி ஏற்க தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளைக்கு வழக்கு தாக்கலாகி நடந்து முடிந்த நிலையில், "முதலில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவி மாங்குடியே" பதவியேற்க வேண்டுமென தீர்ப்பு அளித்தது நீதிமன்றம். இந்த தீர்ப்பிற்கு உடன்படாத பிரியதர்ஷினி அய்யப்பன் தரப்பு உச்ச நீதிமன்றத்திற்கு செல்ல வழக்கு நடைப்பெற்று வருகின்றது. அதற்கடுத்த நாட்களில் நடைபெற்ற ஊராட்சிக்கான துணைத்தலைவர் தேர்தலில் பிரியதர்ஷினி அய்யப்பனின் ஆதரவாளரான பாண்டியராசன் வெற்றிப்பெற்றார். துணைத்தலைவராக பொறுப்பேற்ற நாள்முதலே தனக்கும், தேவி மாங்குடி தரப்பிற்குமான தேர்தல் முன்விரோதத்தை பழி தீர்க்கும் நடவடிக்கையில் செயல்பட்டு வந்தார் என அவர் மீது குற்றச்சாட்டும் வைக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட போக்குவரத்து நகர் பேருந்து நிழற்குடையிலிருந்த, உபயதாரர்களின் பெயர்களை அழிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதாக தெரிகின்றது. தகவலறிந்து அங்கு வந்த தேவிமாங்குடி தரப்பினர் எப்படி பெயர்களை அழிக்கலாம்..? இது ஊராட்சி நிதியில் கட்டப்பட்டது அல்ல.!  என்னுடைய சொந்த நிதியில் கட்டப்பட்டது.. இன்றுவரை இதனை எங்களது சொந்த செலவில் பராமரித்து வருகின்றோம்." என அங்கு கொந்தளிக்க,  வாக்குவாதம் முற்றி மாங்குடி மற்றும் துணைத்தலைவரென இரு தரப்பினருக்கும் கைகலப்பானது. இரு தரப்பையும் எச்சரித்த குன்றக்குடி காவல் நிலையத்தார் இரு தரப்பின் மீதும் வழக்குப் பதிவு செய்தது.

"தலைவர் இல்லாமல் இருக்கும் சங்கராபுரம் ஊராட்சிக்கு இதற்கு முன்பு இரு தடவை தலைவராக இருந்தவர் மாங்குடி. தன்னுடைய தாத்தாவின் 100 வயது நினைவாக 2011ம் ஆண்டு அரசு மருத்துவமனை, போக்குவரத்து நகர், அருணாநகர் மற்றும் ராஜீவ்காந்தி நகர் என நான்கு இடங்களில் ஐந்து பேருந்து நிழற்குடைகளை தலா ரூ. 3.50லட்சம் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்தார். இது தவிர தன்னுடைய சொந்த செலவில் மூன்று நினைவு கலையரங்குகளையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.

இது நாள்வரை அதனுடைய பராமரிப்பு செலவினையும் அவர்தான் செய்து வந்துள்ளார். இதற்கும் ஊராட்சிக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இருப்பினும் தேர்தல் முன்விரோத பழிவாங்கல் நடவடிக்கையில் பெயர்களை அழித்துள்ளார். இது எவ்வகையில் நியாயம்..? அதுபோக மாங்குடி வசிக்கும் பகுதியில் இன்றுவரை தெருவிளக்கும் போடப்படுவதில்லை. அராஜகத்தின் உச்சத்தில் இருக்கின்றார்கள் துணைத்தலைவர் டீம்." என்கிறார் ஒன்றிய கவுன்சிலராக வெற்றிப் பெற்ற திமுகவின் சொக்கலிங்கம். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.


 

சார்ந்த செய்திகள்