Skip to main content

தனியார் பேருந்து ஓட்டுனர்களால் காவு வாங்கப்படும் மனித உயிர்கள்! மோட்டார் வாகன சட்டத்தின் குளறுபடி காரணமா..?

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

திருப்பூரில் தனியார் நிறுவன செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இடையர் தெருவை சேர்ந்த அண்ணாதுரை. மாதந்தோறும் சம்பள பணத்தை மட்டும் தவறாமல் குடும்ப செலவிற்கு அனுப்பி வைத்துவிட்டு, வறுமையின் காரணமாக நேரில் வர முடியாமல் போனில் மட்டுமே தனது மனைவி மக்களுடன் பேசி வந்துள்ளார்.
 

karaikudi incident


6 மாதத்திற்கு பிறகு தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த அண்ணாதுரை நேற்று காலை திருப்பூர் செல்ல காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு வந்திருக்கிறார். திருப்பூர் பேருந்தில் ஏற நடந்து சென்ற அண்ணாதுரையின் மீது அதிவேகமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த பாரதி என்ற தனியார் பேருந்து மோதி தூக்கி வீசியது. கண்ணிமைக்கும்  நேரத்தில் நடந்த விபத்தால் பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விபத்தில் என்ன நடந்தது என்பது அறியாமலேயே ஒரு உயிர் பறிக்கப்பட்டது.

இந்த பரிதாபம் ஒருபுறமிருக்க கடைமையே கண்ணாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை வலை கட்டி பிடித்துக் கொண்டிருந்தார்கள் காரைக்குடி போலீஸார். நமது நாட்டின் காய்ந்து பிய்ந்து போன மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்தை நடுத்தெருவிற்கு கொண்டு வந்த பேருந்து ஓட்டுனர் அருண் நாளையே மறுபடியும் பேருந்தை இயக்க ஆரம்பித்து விடுவார். புதிய மோட்டார் வாகன சட்டமானது வாகன பதிவு கட்டணம், ஓட்டுனர் உரிமம் பதிவு கட்டணம், வாகன புதுபித்தல் பதிவு கட்டணம் போன்ற அரசின் வருவாயை பெருக்கும் முனைப்பில் கட்டணத்தை உயர்த்தி, லாப நோக்கை அடிப்பையாக கொண்டு செயல்படுகிறதே தவிர, சட்டத்தை அலட்சியப்படுத்தி இதுபோன்ற உயிரிழப்புகளையும், மிகப் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வாகன ஓட்டுனர்களை தண்டிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மறுக்கிறது.


சட்டத்தை அலட்சியப்படுத்துவதாலும், விபத்துகளை ஏற்படுத்தும், குறிப்பாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இலகுரக வாகன, கனரக வாகன ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க, மோட்டார் வாகன  சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படாவிட்டால், அதிகப்படியான சாலை பாதுகாப்பு வார விழாக்கள் நடத்தினாலும், உயிர் பலிகளை தடுப்பது என்பது கடலில் கலக்கும் நீரைப் போல வீணாகித்தான் போகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

 

சார்ந்த செய்திகள்