Skip to main content

கொடைக்கானலில் படகுப் போட்டி ஒத்திவைப்பு!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Postponement of boat race in Kodaikanal

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 61 வது மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா கடந்த 17 ஆம் தேதி தொடங்கியது. இந்த கோடை விழா வரும் 26 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இங்கு தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், சுற்றுலாத்துறை மூலமாக கோடை விழாவும் நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணி வகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

அதே சமயம் தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் இன்று (21.05.2024) பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக பெய்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் கோடை விழாவில் முக்கிய விழாவாக இன்று (21.05.2024) நடைபெற இருந்த படகுப் போட்டி தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படகுப் போட்டியானது வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமைச்சர் உதயநிதியைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் திண்டுக்கல் எம்.பி

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Dindigul MP ​​met and congratulated Minister Udhayanidhi

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அமோக வெற்றி பெற்றார். திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இத்தொகுதியை ஒதுக்கியதின் பேரில் வேட்பாளராக சச்சிதானந்தம் களமிறங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர்களின் தீவிர தேர்தல் பிரச்சாரத்துடன் கூட்டணி கட்சிகள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்ததின் மூலம் 4,43,821 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெற்றதுடன் மட்டுமல்லாமல் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தையும் சச்சிதானந்தம் பிடித்தார். 

அதுபோல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்  முகமது முபாரக்கை தவிர பா.ம.க. வேட்பாளர் திலகபாமா, நாம் தமிழர் கட்சி உட்பட சுயேட்சைகள் டெபாசிட் இழந்தனர். அந்த அளவுக்கு இரண்டு அமைச்சர்கள் முயற்சியினால்தான் இப்படி ஒரு வெற்றியை பெற்று இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதைக்கண்டு சிபிஎம் கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட பலரும் சிபிஎம் வேட்பாளரின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்த இரண்டு அமைச்சர்கள் உட்பட ஐ.பி.செந்தில்குமாரை பாராட்டினார்கள். 

Dindigul MP ​​met and congratulated Minister Udhayanidhi

இதைத் தொடர்ந்து அமைச்சர்களான ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடம் அழைத்துச் சென்று வாழ்த்து பெற்றனர். இதனையடுத்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி மற்றும் சக்கரபாணி இருவருடன் சச்சிதானந்தம் இளைஞர் நலன்,  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, அமைச்சர் உதயநிதி சச்சிதானந்ததிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Next Story

பள்ளிகள் திறப்பு; மாணவர்களுக்கு பூகொடுத்து வரவேற்பு

Published on 10/06/2024 | Edited on 10/06/2024
Teachers welcomed the students with flowers

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜுன் 10 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்த நிலையில் தமிழக முழுவதும் இன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்பட இருக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட உள்ளன. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் இன்றைய நாளிலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. பஸ் பாஸ் விநியோகிக்கப்படாத நிலையில் மாணவர்கள் அடையாள அட்டையை வைத்து பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகளை திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தார். அதன்படி பள்ளி வகுப்பறை, ஆசிரியர்கள் அறை, தலைமை ஆசிரியர் அறை என அனைத்தும் சுத்தம் செய்யப்பட வேண்டும்; மழை நீர் கால்வாய்கள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; மேற்கூரைகளில் குப்பை இல்லாததை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி வளாகம் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; பள்ளி திறந்த அன்று ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் முழுமையாக சேர்ந்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும்; பள்ளி திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி பல்வேறு இடங்களில் புதிதாக பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பூக்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். திருச்சி, கடலூர், கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் கோடை விடுமுறை முடிந்து வரும் மாணவர்களை வரவேற்பதோடு, புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு மலர், இனிப்பு, புத்தகப்பை, எழுதுபொருள்  கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்று வருகின்றனர். அந்த வகையில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மாநகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு 'குழந்தைகளை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் பூக்கள் கொடுத்து மாணவர்களைஆசிரியர்கள் வரவேற்றனர்.