கரோனா வைரஸ் விவகாரம் ஒட்டுமொத்த உலகையும் உருகுலைய வைத்துவருகிறது. ஒன்றுமறியாத கிராமப்புற மக்களும் செய்வதறியாமல் கையறு நிலையில் விழிபிதுங்கி முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் இளைஞர்கள் என தாமாகவே முன்வந்து உதவ நினைத்தாலும், அவர்களுக்கான கரோனா அச்சம் அதை தடுத்து நிறுத்தியே வருகிறது. அதையும் மீறி சில மனிதநேயமிக்கவர்களும், அரசியல் பிரபலங்களும், காவல்துறையினரும் ஆங்காங்கே பலவகையில் உதவிகள் செய்தபடியேதான் இருக்கின்றனர்.

இந்தசூழலில் கரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையினரின் பங்கு சற்று அபரீதமானதாகவே இருந்துவருகிறது, அவர்கள் தாங்கள் பணியாற்றும் பகுதிகளில் உணவு வழங்குவது, உணவுப்பொருள் வழங்குவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எப்பொழுதுமே காவல்துறையினரை வில்லன்களை போல பார்த்துவந்த மனித சமூகம், கரோனா வைரஸ் பணிகளுக்குப்பிறகு அவர்களை சற்று பேசவே செய்திருக்கிறது.

அந்தவகையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பந்தநல்லூர் சரகம் மிகவும் பின்தங்கிய கிராமபகுதிகளை கொண்டது என்பதால், அங்குள்ள காவல்துறையினர் தினந்தினம் ஏதாவது ஒருபகுதியில், ஏதாவது ஒரு உதவிகளை சத்தமே இல்லாமல் செய்துகொண்டே இருக்கின்றனர். காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா ஒவ்வொரு கிராமமாக முதற்கட்டமாக, அரிசி மற்றும் உணவு பொருட்களை வழங்கிவந்தார். அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக தற்போது கிராமம் கிராமமாக கபசுரக் குடிநீர் வழங்கி, விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்துவருகிறார்.
"கபசுரக் குடிநீரை தினமும் அரசு மருத்துவர்களின் ஆலோசனைப்படியே காய்ச்சி வடிகட்டிய நீரை போலீஸ் வாகனத்தில் எடுத்துக்கொண்டு கிராமம் கிராமமாக சென்று, கரோனா குறித்தான விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து பிறகு கபசுரக் குடிநீரை கொடுக்கிறோம், பந்தநல்லூர் காவல்சராக பகுதி கிராமபுற பகுதிகள் என்பதால் கபசுர குடிநீரோ, பொடியோ கிடைக்கவில்லை என சில கிராமத்து மக்கள் கூறினார்கள். அதனால் கபசுர குடிநீர் வழங்க முடிவெடுத்து வழங்கிவருகிறோம்.

தற்போது விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளித்திருப்பதால் பெண்களும் ஆண்களும் வயற்காட்டில் கோடை சாகுபடி வேலை பார்த்துவருகின்றனர். அவர்களிடம் கரோனா குறித்தான தகவல்களையும், சமுக இடைவேளியோடு வேலை பார்க்கவேண்டும் என்பது குறித்தான விவரங்களையும் எடுத்துக்கூறி கபசுரக் குடிநீரை வழங்கிவருகிறோம்," என்கிறார்கள் காவலர்கள்.
போலீஸாரின் அபரீதமான பணிகள் பொதுமக்கள், வர்த்தகர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப்பெற்றுள்ளது.