கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை - எலவாசனூர் கோட்டை சாலையில் திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ் குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் ரத்தினம் என்பவர் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளத்தனமாக கொண்டு வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல்படி அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதோடு அவரிடமிருந்து 58 மதுபாட்டில்கள் மற்றும் ஐந்து லிட்டர் சாராயம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பிகே மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஹரி விக்னேஷ் என்பவரும் மது பாட்டில் விற்பனை செய்தபோது கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து சிறையில் அடைப்பதற்காக ஜி அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ய கொண்டு சென்றனர். இரண்டு கைதிகளையும் பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல வேண்டி அவர்கள் இருவரையும் காவலர் புஷ்பராஜ், சம்பத் இருவரும் தனித்தனி இருசக்கர வாகனத்தில் கைதிகளை அமர வைத்து மருத்துவமனை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றனர். அப்போது வயல்வெளி வழியாக வாகனத்தில் செல்லும்போது கைதி ரத்தினம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூற வாகனத்தை நிறுத்தினார்.
சிறுநீர் கழிக்க ஒதுங்கிய ரத்தினம் திடீரென கரும்பு வயலுக்குள் தப்பி ஓடி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் இருவரும் கரும்பு வயலுக்குள் புகுந்து நீண்ட நேரம் தேடியும் ரத்தினம் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். திருக்கோவிலூரில் இருந்து இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் கைதி தப்பி ஓடிய கரும்பு காட்டு பகுதிக்கு விரைந்து சென்றனர். அந்தக் கரும்பு காட்டை சல்லடை போட்டு நீண்ட தேடலுக்குப் பிறகு அங்கு பதுங்கி இருந்த ரத்தினத்தை கைது செய்தனர். அதன் பிறகு பலத்த பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை செய்து ரத்தினத்தை திருக்கோவிலூர் கிளைச் சிறையில் அடைத்தனர். சிறுநீர் கழித்துவிட்டு வருவதாகக் கூறி கைதி தப்பி ஓடி மீண்டும் பிடிபட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.