Skip to main content

“கலைஞரே மிகப்பெரிய நூலகம் தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 15/07/2023 | Edited on 15/07/2023

 

An kalaignar is the greatest library CM mk Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு  வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது.

 

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்தார். இதையடுத்து நூலகத்தில் இருந்த வருகைப் பதிவேட்டில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல் நிலையத்தை மதுரையில் திறந்து வைக்க வாய்ப்பு கிடைத்தமைக்கு பெருமைப்படுகிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் அயராது உழைப்போம், வாழ்க கலைஞர்” என தனது கருத்துகளை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். நூலகத் திறப்பு விழாவில் ஹெச்.சி.எல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

அதனைத் தொடர்ந்து நூலகத்தில் உள்ள அரங்குகளை முதல்வர் பார்வையிட்டார். அப்போது அங்கு இருந்த குழந்தைகளிடம் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார். முன்னதாக நூலகத்தின் வாயிலில் உள்ள கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்து கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

 

கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்புக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பொறுத்தவரைக்கும் குழந்தைகள், மாணவர்கள், போட்டித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பயன்பெறக்கூடிய வகையில் ஆறு தளங்கள் - மூன்று லட்சம் புத்தகங்களைப் பெற்றிருக்கக்கூடிய இந்த நூலகத்திற்கு அறிவுத் தேடலுடன் நீங்கள் வரும்போது உங்களை அன்போடு வரவேற்க கலைஞரே சிலை வடிவமாக இங்கே காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.

 

An kalaignar is the greatest library CM mk Stalin

 

கலைஞரைப் பொறுத்தவரைக்கும் எந்த துறையில் நுழைந்தாலும் அந்த துறையில் அவர்தான் ‘நம்பர் ஒன்’. ஐம்பது ஆண்டு காலம் திமுக தலைவர். ஐந்து முறை தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர். அதிக முறை சட்டமன்ற உறுப்பினர். நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார். திரைப்படங்களை தயாரித்தார். நாடகங்களைத் தயாரித்தார், நடிக்கவும் செய்தார். மாணவனாக இருக்கும்போதே கையெழுத்துப் பிரதியாக பத்திரிக்கையை நடத்தினார். பத்திரிகை ஆசிரியராக இருந்தார். எழுத்தாளராக பத்திரிகையாளராகவும் இயங்கினார். கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், உரையாசிரியர் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்தார். இப்படிப்பட்ட பன்முக ஆற்றல் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரில்தான் பன்முக ஆற்றலை நீங்களும் வளர்த்துக் கொள்ளக் கூடிய இந்த நூலகம் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

 

கலைஞரே மிகப்பெரிய நூலகம் தான். அவர் எழுதிய புத்தகங்களை வைத்தால் அதுவே பெரிய நூலகம் போல இருக்கும். கலைஞரைப் பற்றி எழுதியவர்கள், கலைஞரை ஆய்வு செய்தவர்கள், கலைஞர் மாதிரியே எழுதியவர்கள் என்று தமிழ்நாட்டில் தனக்கென ஒரு எழுதுகோல் படையையே வைத்திருந்தார் தலைவர் கலைஞர். நம் தமிழ்நாட்டில் 'கலைஞர் பரம்பரை' என்றே ஒன்று இருக்கிறது. நம்முடைய தமிழ்நாட்டை கலைஞர் பரம்பரைதான் வாழையடி வாழையாக தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கின்ற பரம்பரை” எனப்  பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்