காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. சம்பவத்தன்று மாலை கல்லூரி முடிந்ததும் மாணவிகள் சிலர் காஞ்சீபுரம் பஸ் நிலையம் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினர். அப்போது பின்னர் வந்த மற்றொரு ஷேர் ஆட்டோ அடுத்த இடத்தில் பயணிகளை ஏற்றவதற்காக முந்தி சென்றது.
இதையடுத்து 2 ஷேர் ஆட்டோக்களும் போட்டி போட்டு முந்தி சென்றனர். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஷேர் ஆட்டோக்கள் ஒன்றோடு ஒன்று மோதியது. இதில் ஒரு ஷேர் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் கல்லூரி மாணவிகளான வாலாஜாபாத்தை சேர்ந்த பொன்னி, அரப்பாக்கத்தை சேர்ந்த சாலினி ஆகிய 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 13 பேரும் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் காங்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் மாணவி பொன்னியின் வலது கை முறிந்தது.
படுகாயம் அடைந்த மாணவி பொன்னிக்கு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாணவி சாலினி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோக்கள் அதிக எண்ணிக்கையில் செல்கின்றன. ஆட்களை ஏற்ற வேண்டும் என்று போட்டி போட்டு செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அவ்வப்போது நடக்கிறது. ஆட்டோக்களை ஒழுங்குமுறை படுத்த வேண்டும் என்றும், அதேபோல் போட்டி போட்டு செல்லும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் காஞ்சிபுரம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.