
கலைஞர் பிறந்தநாள் விழாவை நேற்று திமுகவினர் கொண்டாடினர். இதில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான சி.வி.கணேசன், நேற்று முழுவதும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். காலை திட்டக்குடி பேருந்து நிலையத்தில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு 69 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
அதன்பிறகு அப்பகுதியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூலம் வழங்கினர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். அக்கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். கருவேப்பிலங்குறிச்சியில் ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா, இலவச அரிசி ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது கலைஞர் செய்த சாதனைகள் குறித்து விரிவாகப் பேசினார்.