தி.மு.க. தலைவர் கலைஞரின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. உடல் அடக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 3-வது நாளான இன்று தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் அதிக அளவில் வந்து அஞ்சலி செலுத்தினர். பொது மக்கள் பலர் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்தோடு அஞ்சலி செலுத்தியதை காண முடிந்தது.
வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் கோரக்கு சித்தர் தவம் செய்த பகுதியில் வசித்து வருபவர் உதயகிரி சுவாமிகள். இவர் பொதுமக்களோடு பொது மக்களாக நின்று அஞ்சலி செலுத்திவிட்டு வெளியில் வந்தார்.
அப்போது அவர், கலைஞர் கடவுள் மறுப்பு கொள்கை உடையவராக இருந்தாலும் அன்பு, அரவணைப்பு, சாந்தம் ஆகியவற்றைத்தான் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் பல நன்மைகளை அவர் செய்துள்ளார். சொல்லப் போனால் அவரும் சித்தர் தான். அபூர்வமான மனிதர்களில் அவரும் ஒருவர். 7 வயதில் இருந்தே வெள்ளியங்கிரி மலையில் நான் சேவை செய்து வருகிறேன். எனது குருநாதர் நாராயண குரு. ஜம்முவில் உள்ள அவரிடம் தான் நான் தீட்சை பெற்றேன். என்னை கடவுள் தான் இங்கு அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு கூறினார்.