புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அரிசி, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அங்குள்ள கிராம சேவை மையத்தில் அதிகாரிகள் இறக்கி வைத்து வழங்கினார்கள். சில நாட்களில் பொருட்கள் முடிந்துவிட்டது. மறுபடியும் வரும் போது தரப்படும் என்று சொல்லி மையத்தை பூட்டி வைத்தனர். ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் இன்று (28.11.2019) வியாழக்கிழமை கிராம சேவை மையத்தின் பின்பக்கம் இருந்து துர்நாற்றம் வர அங்கு சென்ற இளைஞர்கள் மூட்டைகள் புதைக்கப்பட்டிருந்ததை பார்த்து வெளியே எடுத்த போது எல்லாம் நிவாரண அரிசி மூட்டைகள். சுமார் 30 மூட்டைகள் வரை வெளியே எடுத்து போட்டனர். அப்போது அங்கு வந்த கிராம உதவியாளர் அவசரமாக அந்த மூட்டைகளை மீண்டும் கிராம சேவை மையத்திற்குள் எடுத்து வைத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அங்கு கூடிய மக்கள் இளைஞர்களுடன் சேர்ந்து மீண்டும் தோண்டிய போது மேலும் அரிசி மூட்டைகள் வெளியே வந்தது. சுமார் 50 மூட்டைகளுக்கு மேல் ஏழை மக்களுக்கு வழங்கி வேண்டிய அரிசி மூட்டைகள் கெட்டுப் போய் புதைக்கப்பட்டு துர்நாற்றம் வீசியது.
இது சம்மந்தமாக அதிகாரிகள் வருவார்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் ஏமாந்தனர். அதன் பிறகு கிராம மக்கள் அதிகமாக திரண்டுவிட்டதால் இந்திரா காந்தி சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்திற்கு மேலாகியும் அதிகாரிகள் வரவில்லை. மேலும் கிராம சேவை மையத்தில் நிவாரணப் பொருட்கள், தார்பாய் போன்றவை இருக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் அதிகாரிகள் வந்து புதைத்த அசிரிக்கு பதில் சொல்வதுடன் கிராம சேவை மையத்தையும் திறந்து காட்ட வேண்டும். அரிசியை புதைத்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளையும் எழுப்பினார்கள்.
அதே போல நாகுடி கிராம சேவை மையத்திலும் தார்பாய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஒரு வருடமாக பூட்டி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றையும் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். ஏழை மக்கள் சாப்பிடும் அரிசியை கூட அவர்களுக்கு கொடுக்காமல் பதுக்கி வைத்து கெட வைத்து புதைத்த அதிகாரிகளை என்ன சொல்வது..