கடந்த ஆண்டு பா.ஜ.கவைச் சேர்ந்த சூர்யா சிவாவிற்கும், பாஜகவின் சிறுபான்மை அணியின் டெய்சி என்பவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து சூர்யா சிவா கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் அவர் வகித்து வந்த ஓபிசி அணியின் மாநில செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டு அவர் வகித்து வந்த பதிவியில் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், சூர்யா சிவா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்று அளித்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு இன்று (15-02-24) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில், மனுதாரர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து, தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, “மனுதாரர் யார் என்பது நீதிமன்றத்திற்கு நன்றாகவே தெரியும். மனுதாரருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்க முடியும். இப்போதெல்லாம், ஒருவர், இருவர் போலீஸ் பாதுகாப்பு வைத்துக்கொள்வது பேஷனாக மாறிவிட்டது” என்று கருத்து கூறி அரசு தரப்பு வாதத்தை ஏற்று சூர்யா சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.