Skip to main content

“அமைச்சருக்கே தெரியாமல் எப்படி அரசாணை வெளி வந்தது?” - ஜெயக்குமார் கேள்வி 

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

jeyakumar question raised for model school entrance exam related 

 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின் போது நுழைவு தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசும்போது, "திமுகவினர் நீட் நுழைவு தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதே வேளையில் அரசு மாதிரி பள்ளிகளில் நுழைவுத் தேர்வை கொண்டு வர முயற்சி செய்கின்றனர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கே தெரியாமல் இதற்கான அரசாணைகள் வெளிவந்துள்ளன.

 

அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் மன்ற தலைவருக்கான வேலையையும், அவர் புகழ் பாடும் வேலையையும் செய்து கொண்டிருக்கிறார். இதனை விட்டு விட்டு அவர் பள்ளிக் கல்வித் துறையில் கவனம் செலுத்துங்கள். இதனைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஏறக்குறைய 22 மாதங்களில் எவ்வளவு குளறுபடி நடந்துள்ளன. பல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்து இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக நிர்வாகத் திறமை இல்லாமல் இருக்கிறது. கீழ் நிலையில் இன்னைக்கு என்ன நடக்கிறது என்று அமைச்சருக்கு தெரியாமல் இருக்கிறது. கையெழுத்து இடாமல் எப்படி அரசாணை வெளியாகும். நானும் அமைச்சராக இருந்திருக்கிறேன்.  அமைச்சரும், முதலமைச்சரும் கையெழுத்து போட்டால் தான் அரசாணை வெளியாகும். அப்படி இருக்கும் போது  தனது துறையில் என்ன நடக்கிறது என்று அமைச்சருக்கு தெரியவில்லை.

 

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு 2022 ஆகஸ்ட் மாதம் 18 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான முடிவு முதலில் செப்டம்பர் மாதம் வெளியிடுவோம் என்றனர், பிறகு அக்டோபர் மாதம் வெளியிடுவோம் என்றனர். தற்போது 5வது முறையாக இப்போது வெளியாகும் என்கிறார்கள். தேர்வு முடிவானது வரும் ஆனால் வராது. அதிமுக ஆட்சியின் போது 13 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வில் 10 ஆயிரம் பேருக்கு பணி வழங்கினோம்.  அதற்கான முடிவு 2 மாதத்தில் வெளி வந்தது. ஆனால் தற்போது நிர்வாகத் திறமை இல்லாமல் குரூப் 2 தேர்வைக் கூட சரியாக நடத்த தெரியவில்லை. தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டு இருக்கிறது." என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்