மாதிரிப்படம்
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகளைப் பெருமளவு கலந்துகொள்ள வைக்க அதிமுக நிர்வாகிகள் சிலர் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
காமராஜர் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை, 27.01.2021-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்க உள்ளார். ரூ.58 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தைத் திறப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதேபோல் ஜெயலலிதாவின் உருவச்சிலை சென்னை உயர்கல்வி மன்ற வளாகமான, லேடி வெலிங்டன் சீமாட்டி ஆசிரியர் பயிற்சிப் பள்ளி உள்ள வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இதற்கான விழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மாநிலக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரியில் படிக்கிற மாணவிகள் புடகை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் பங்கேற்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதாம். மாணவிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அதனை கண்காணிக்க பேராசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளார்களாம்.
விழா நடைபெறுவதற்கு இரண்டு நாள் முன்பு, அதாவது இன்று (ஜனவரி 25) நினைவிட சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்திருக்கும் மகளிர் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளைக் கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களுக்குப் பச்சை வண்ண புடைவைகள் வழங்கவும், அதனை உடுத்திக்கொண்டு அவர்கள் ஜனவரி 27 அன்று திறப்பு விழாவிற்கு வருவதை உறுதிப்படுத்தவும் அதிமுகவினர் வேலை செய்து வருகின்றனர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இதுகுறித்து நக்கீரனிடம் தனது கவலையை வெளிப்படுத்திய மாணவி ஒருவரின் தாய், "கரோனா காலத்தில் பிள்ளைகளைக் கல்லூரிக்கு அனுப்புவதே பயமாக இருக்கிறது. இப்படியான இந்த காலகட்டத்தில், அரசியல் நோக்கத்திற்காகப் பிள்ளைகளைப் பயன்படுத்தி கூட்டம் சேர்க்கிறார்கள். இது மோசமான விஷயமாகும். இப்படி மாணவிகளைத் திறப்பு விழாவிற்குப் பயன்படுத்துவது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் கூறப்படாத நிலையில், இதுபோன்ற திட்டம் இருந்தால் அதிமுகவினர், அதனைக் கைவிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும், கரோனா பரவல் தற்போதைக்கு சற்றே குறைந்திருப்பதாகக் கூறினாலும், இதுபோன்ற கட்சி சார்ந்த விழாவிற்காகக் கூட்டம் சேர்க்கும் பணிகளுக்காக மாணவர்களைப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.