ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் 19ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசும்போது, “நில அளவையர் பற்றாக்குறையால், கூட்டுப்பட்டாக்களை, தனிப்பட்டாக்களாகப் பிரித்து வழங்க முடியாத நிலை உள்ளது. அடுத்து, எலிகளால் விவசாயப் பயிர்கள் சேதமாகிறது. எலிக்கு வைக்கும் மருந்தினை, சில இடங்களில் மயில்கள் சாப்பிட்டு விடுகிறது இதனால், மயில்கள் இறக்க நேரிடுகிறது. அதனால், விவசாயிகள் மீது வழக்குப் பதிவாகிறது. எனவே, பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சொட்டு நீர்ப்பாசனத்திற்கான மானியத்தை ஒன்றரை லட்சமாக அதிகரித்து வழங்க வேண்டும். மஞ்சள், மரவள்ளிக் கிழங்கிற்கு தனி வாரியம் அமைக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாகச் செயல்படும் சாய, சலவை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலிங்கராயன் கால்வாய் நீரில் மாசு குறித்து அறிய பொருத்தப்பட்ட தானியங்கி கருவியைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். வேளாண் பொறியியல்துறை மூலம் மஞ்சள் அறுவடை இயந்திரத்தைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மஞ்சள் தரம் அறியும் கருவியினை கிராமம்தோறும் கொண்டுசென்று பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான்கு இடங்களில் நடக்கும் மஞ்சள் ஏல விற்பனையை ஒரே இடத்தில் நடத்த வேண்டும். தென்னமரங்களைத் தாக்கும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த வேளாண் பல்கலைக்கழக உதவியுடன் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் ரூபாய் 750 கோடி மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். ஈரோடு மாவட்ட விவசாயிகள் பெற்றிருந்த ரூபாய் 824 கோடி பயிர்க்கடனை ரத்து செய்த அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்றனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் பேசியதாவது, “கரோனா வைரஸ் பரவல் காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு வேளாண் குறைதீர் கூட்டம் நடந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுமாயின், அடுத்த மாதம் இக்கூட்டம் நடைபெறாது. இருப்பினும், விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்கள் மற்றும் தொலைப்பேசி, வாட்ஸ் அப் மூலம் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு, கோரிக்கைகளுக்குத் தீர்வு காணப்படும். காலிங்கராயன் கால்வாயில் தானியங்கி முறையில் மாசு கண்டறியும் கருவியைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறும்போது "கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஒன்றரை லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறுகிறது. இதில், ரூபாய் 750 கோடி மதிப்பீட்டில் கான்கீரிட் தளம் அமைக்கும் திட்டத்தை இந்த அரசு கைவிட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு விரோதமானது, இந்த திட்டம். ஏற்கனவே 2011-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா இத்திட்டத்தை ரத்து செய்துள்ளார். ஆனால், அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமி அரசு, கான்ட்ராக்ட் கமிஷனுக்காக இதைச் செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது. 'ஜெ' எதிர்த்தார், எடப்பாடி ஆதரிக்கிறார். அப்படி இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்தால், கசிவுநீர் மூலம் பாசனம் பெறும் ஏராளமான நிலங்கள் பாதிக்கப்படும்” என்றனர் கொதிப்புடன்.