Skip to main content

திருவண்ணாமலையில் குவிந்த ஜப்பான் பக்தர்கள்

Published on 07/01/2024 | Edited on 07/01/2024

 

திருவண்ணாமலை நகரில் கிரிவலப் பாதையில் பிரம்மாண்டமான பந்தலில் உலக நன்மைக்காக எனச் சொல்லி ஒரு பெரும் யாகம் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்த யாகத்தில் திரைபிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஜப்பானில் கோலிவுட் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் இருப்பது தமிழ்நாட்டு திரை ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் ஜப்பானில் சிவ பக்தர்கள் இருப்பதும் அவர்கள் திருவண்ணாமலையில் நடைபெற்ற யாகத்தில் வந்து கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது திருவண்ணாமலை மக்களிடத்தில்.

ஜப்பானில் குடும்பத்தோடு வாழும் தொழிலதிபர் தியாக குறிஞ்சி செல்வன், அவரது மனைவி மருத்துவர் விஜயலட்சுமி இருவரும் சிதம்பரம் தீட்சதரர்களை சென்னையைச் சேர்ந்த அகத்தியர் துரைசாமி சுப்புரத்தினம் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் இந்த மகா யாகத்தை நடத்தினர்.

உலக நன்மைக்காக தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இந்த யாகத்தை பிரமாண்டமாக நடத்தி வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு திருவண்ணாமலையில் நடத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டிலிருந்து குருநாதர் மசாகி அவயமா தலைமையில் 100 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சிவபக்தர்களான அண்ணாமலையார் பக்தர்கள் இதற்காகவே வந்து கலந்து கொண்டதை உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்

திரைத்துறையை சேர்ந்த நடிகர்கள் மோகன், சூரி, ஜீவா, ஸ்ரீகாந்த், கணேஷ், ஆர்த்தி கணேஷ், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, ஸ்ரீ ரம்யா, ஜனனி ஐயர், விஜய் டிவி புகழ் அமுதவாணன் பாடகி தான்யஸ்ரீ, பாடகி அனிதா, பிரபல வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா உள்ளிட்ட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த யாகத்தில் கலந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் யாகத்தில்  கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி பிரமாண்டப்படுத்தியிருந்தனர். ஏற்கனவே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா வை சேர்ந்த சிவபக்தர்கள் திருவண்ணாமலை அண்ணாமலையாரை வணங்கவும், கிரிவலம் வர குவிந்து வரும் நிலையில் ஜப்பானை சேர்ந்தவர்கள் அண்ணாமலையார் பக்தர்களாக திருவண்ணாமலை வந்திருந்ததை அங்கு வந்த பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்