டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
இது தொடர்பாக அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் கும்பலுக்குத் தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. அதோடு ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் கைது செய்தது. மேலும் இது தொடர்பாக மத்திய போதைப் பொருள் தடுப்பு துறையால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது ஜாபர் சாதிக் வழக்கை விசாரித்த துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் திரும்பப் பெறப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. முன்னதாக ஞானேஸ்வர் சிங், தமிழக காவல்துறை அதிகாரிகளுடன், ஜாபர் சாதிக் நெருங்கிப் பழகி போதைப் பொருட்களைக் கடத்தி உள்ளனர்” எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து பல்வேறு தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.