மின்கட்டண உயர்வு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 'கொங்கு மண்டலம் என்றாலே தமிழ்நாட்டிற்கு தொழில் வளத்தை கொடுக்கின்ற மண்டலம். ஆனால் கடந்த 57 ஆண்டுகளாக இந்த பகுதியில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குறு சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு வருகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் மின் கட்டண உயர்வு. அதிலும் குறிப்பாக கொரோனா பரவலுக்கு பிறகு பல நிறுவனங்களை மூடிய பிறகும் தமிழக அரசு கடந்த 23 மாதங்களில் மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.
2022 செப்டம்பர் மாதம் 26% மின் கட்டண உயர்வு இருந்தது. 2023 ஜூலை மாதம் 2.1 விழுக்காடு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024 ஜூலை மாதம் 4.8 விழுக்காடு என மொத்தம் கிட்டத்தட்ட 34 விழுக்காடு 23 மாதங்களில் மின் கட்டணம் திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது . இது வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது. அதோடு மட்டுமல்லாது இதை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனால் அனைத்து மக்களுக்கும் பாதிப்பு. தமிழகத்தில் உள்ள ஏழே முக்கால் கோடி மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த மின் கட்டணம் உயர்வு. எனவே முதலமைச்சர் இந்த கட்டணம் உயர்வை திரும்பப் பெற வேண்டும். குறைக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாட்டில் தொழில் செய்ய முடியாத சூழல் வந்துவிடும். அது மட்டுமல்ல திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் மின் கணக்கெடுப்பு நடத்துவோம் என்று, அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை .அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்கள் என்றால் 15 லிருந்து 20 விழுக்காடு மின் கட்டணம் குறையும். குறிப்பாக ஏழை நடுத்தர மக்களுக்கு குறையும்.
காவிரியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் மேட்டூர் அணை நிறைந்துவிடும். இரண்டு நாட்களுக்குப் பிறகு அத்தனை நீரும் கடலுக்குத் தான் செல்ல இருக்கிறது. காரணம் 57 ஆண்டு காலம் ஆட்சி செய்து இந்த நீரை எப்படி பயன்படுத்துவது என்பதைக் கூட இவர்கள் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொள்வதற்கு இவர்களுக்கு வாய்ப்பும் இல்லை'' என்றார்.