Skip to main content

“மத்திய அமைச்சருக்கு காவிரி பிரச்சனையின் முழு விவரம் தெரியவில்லை” - அமைச்சர் துரைமுருகன்

Published on 06/08/2023 | Edited on 06/08/2023

 

The Union Minister does not know the full details of the Cauvery issue Minister Duraimurugan

 

கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம், உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுபடி தமிழகத்திற்குத் தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். இதையடுத்து மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள். ஏன் பிரச்சனையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதற்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு மாத காலமாக கர்நாடகம் தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவித்த அளவுபடி தண்ணீரை வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கும், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதி இருக்கிறார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நான் இரண்டு முறை நேரில் சந்தித்து நிலைமைகளை விளக்கி இருக்கிறேன். காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடு என்று கூறுகிற அதிகாரம் காவிரி மேலாண்மை வாரியத்திற்குத்தான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில் தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டு தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்துள்ளார். ஆனாலும், முழுமையாக காவிரி மேலாண்மை வாரியம் இதுவரையில் செயல்படவில்லை.

 

நீர் சராசரியாக கிடைக்கும் வருடங்களில் கர்நாடகம் எந்தெந்த மாதங்களில் எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆனால், நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரைப் பகிர்ந்து கொள்வதை புரோ ரேட்டா பேசிஸ் என்று குறிப்பிடுவார்கள். அந்த பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை செய்யவில்லை. இந்த வாரியம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவே தான் தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்து விட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். அந்த பணியை வாரியம் செய்ய வேண்டும் என்று தான் தமிழக முதல்வரும் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்திற்கு பிரதமர் அலுவலகமோ அல்லது  மத்திய நீர்வளத்துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள் ஏன் பிரச்சனையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது" என்று தெரிவித்திருக்கிறார்.

 

மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு காவிரி பிரச்சனையின் முழு விவரம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். 1967 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை இப்பிரச்சனை குறித்துப் பேசி எந்த முடிவிற்கும் வர முடியாத நிலையில் தான் மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, அந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்திற்கு போய், உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பிறகு, இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண முடிந்திருந்தால் நடுவர் மன்றம் அமைத்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. இவையெல்லாம் நீண்ட காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வரலாறு. 'தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு வேறு' என்று கிராமங்களில் கூறுவது போல, தோழமையாக இருந்தாலும் தோழமையாக இல்லாவிட்டாலும் அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் அவரவர்கள் உறுதியாக இருப்பார்கள். அந்த நிலைப்பாடு தான் தமிழகத்தின் நிலைப்பாடு. இந்த விவரமெல்லாம் தெரியாமல் மத்திய இணை அமைச்சர் ஒருவர் தளபதிக்கு அறிவுரை சொல்வது போல் ஓர் அறிக்கை விட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

 

இதில் இன்னொரு வேடிக்கை. வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானது என்னவென்றால், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராகவும், முன்னாள் முதல்வராகவும் இருந்தவருமான ஓ. பன்னீர்செல்வம் ஒரு அறிக்கையில், தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கர்நாடக மாநில முதல்வரோடும், நீர்வளத்துறை அமைச்சரோடும் பேசித் தண்ணீரைப் பெற வேண்டும் என்று தெரிவித்திருப்பதுதான். இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்ற நிலையில்தான் நடுவர் மன்றம் போனோம், தீர்ப்பு பெற்றிருக்கிறோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சனை என்றால் உச்சநீதிமன்றத்தைத் தான் நாடே வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடக மாநிலத்தோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறுவது காவிரி பிரச்சனையின் அடிப்படை வரலாறே தெரியவில்லை என்பதாகத்தான் அர்த்தம்.  பாவம், அரசியல் பிரச்சனையில் ஓ. பன்னீர்செல்வம் மிகவும் குழம்பிப் போய் இருக்கிறார் என்பதைத் தான் அவர் அறிக்கை காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்