சென்னை சங்கமம் எனும் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி இன்று சென்னை தீவுத்திடலில் துவங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்வை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், '' 'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார் எழுதிய வரி இது. வெறும் ஆரவாரம் காட்டக்கூடிய வரி மட்டுமல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆவணப்படுத்தப்பட்ட நம்முடைய பண்பாட்டின் இலக்கியப் பெட்டகங்களை முன்னிறுத்தக்கூடிய வரி. நெஞ்சை அள்ளக்கூடிய சிலப்பதிகாரம் என முத்தமிழ்க்காப்பியமாகப் போற்றப்படும் அளவுக்கு இயல், இசை, நாடகம் எனப் பழந்தமிழ் நாட்டின் கலைமேன்மையை திட்டவட்டமாகத் தீட்டிக்காட்டி இருக்கிறது.
திராவிட இயக்கம்தான் கலைகள் என்பது வசதி படைத்த வர்க்கத்தின் பொழுதுபோக்கு அம்சம் என்ற இருந்த நிலையை அடியோடு மாற்றி அவற்றை அடித்தட்டு மக்களிடத்தில் எடுத்துச் சென்ற இயக்கம். திராவிட இயக்கம்தான் ஒரு சமுதாயத்தில் ஒரு தரப்பினருக்காக சாதிகளின் பெயரால், சமயங்களில் பெயரால், சமத்துவத்திற்கு சமாதி கட்ட நினைத்த போக்கிற்கு எதிரான சம்பட்டியாக மூடப்பழக்கங்களுக்கு எதிராக கலைகளை மாற்றியது. திராவிட இயக்கம்தான் கலைகளின் வழியாக மக்களின் வலியை பேசியது. கலை பண்பாட்டு துறையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு 48 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. கலைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், கலைகளை போதிக்கும் கல்விக்கூடங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் இடங்களில் கலைச் சங்கமம் என்ற பெயரில் 160 கலை நிகழ்ச்சிகளை நடத்த ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. 500 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் வழங்குவதற்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது பெற்ற வறிய நிலையில் வாழும் ஒவ்வொரு மூத்த சிறந்த கலைஞர்களுக்கும் பொற்கிழியாக வழங்கப்படும் விருது தொகை 50,000 ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது'' என்றார்.