மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.