
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் அண்ணா நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், வேப்பேரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோன்று திருவண்ணாமலையில் உள்ள அமைச்சருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் இந்தச் சோதனையானது நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று(3.11.2023) காலை முதல் தொடங்கிய இந்த சோதனை 24 மணி நேரத்தைக் கடந்து 2வது நாளான இன்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எ.வ. வேலுவின் மகன் மற்றும் உறவினர்கள் வீட்டிலும் இந்த சோதனையானது தொடர்ந்து வருகிறது. இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ. வேலு மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் எதன் அடிப்படையில் வருமான வரிச்சோதனை நடைபெறுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் சோதனையில் இதுவரை ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதாகவும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இதையடுத்து கோவையில் திமுக நிர்வாகி மீனா ஜெயகுமார் இல்லத்திலும் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.