ஐபிஎல் போட்டிகளின்போது கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய பிசிசிஐ- க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா வைரஸ் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மார்ச் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், 'கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி சீனாவின் வுஹான் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சீன மருத்துவர் லீ வென்லியங் என்பவர் கண்டறிந்தார். தற்போது வரை உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த, பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுள்ளது. இதனால் 150 ஆண்டு கால பழமையான இத்தாலி கால்பந்து லீக் போட்டிகள் உட்பட 10- க்கும் மேற்பட்ட விளையாட்டு போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
ஆனால், மார்ச் 29-ம் தேதி தொடங்கி மே 4-ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள் என்பதால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில், இந்தியா- தென்னாப்பிரிக்கா ஒரு நாள் போட்டி உட்பட பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும், ஐபிஎல் போட்டிகளைக் தள்ளிவைப்பதா? போட்டிகளின் போது மைதானத்திற்கு வரும் ரசிகர்களை தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதிப்பதா? என்பது குறித்து பதிலளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஐபிஎல் போட்டிகளின் போது கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகளை அறிக்கையாகத் தாக்கல் செய்ய பிசிசிஐ- க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 23- ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ராஜசேகர், மத்திய அரசு தரப்பில் ரபு மனோகர், பிசிசிஐ தரப்பில் பி.ஆர்.ராமன், தமிழக அரசு தரப்பில் விஜயகுமார் ஆகியோர் ஆஜரானார்கள்.