
தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம் அமலில் உள்ளது.
அதேபோல் மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலாகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில்,
கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து களத்தில் நின்று முன் களப்பணியாளர்கள் போராடி வருகிறார்கள். இந்தியாவிலேயே அதிகபட்சமாக 30,000 பரிசோதனைகள் செய்யும் அளவை எட்டியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை 9 லட்சத்து 19 ஆயிரத்து 204 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஐசிஎம்ஆர் அனுமதியுடன் 87 பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் இன்று 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 34 ஆயிரத்து 112 பேர் மொத்தமாக கரோனவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மக்களிடம் எந்த பதற்றமும் வேண்டாம் ஆனால் அதே நேரத்தில் மக்கள் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
தமிழகத்தில் குணமடைந்தோர் விகிதம் 55 சதவீதமாக உள்ளது. இயற்கை பேரிடர்கள் வந்து விட்டுப் போய்விடும் அதற்கு நேரம் நிர்ணயித்து நம்மால் மீட்பு பணி செய்ய முடியும் ஆனால் இந்த கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரியால் ஏற்பட்டுள்ள பேரிடரை கணிக்க வல்லுனர்களே திணறும் நிலை உள்ளது.
எந்த ஆக்கப்பூர்வமான தகவல்களை கூறினாலும் அரசு ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. கரோனாவிலிருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று எதார்த்தமாக முதல்வர் கூறியது என்ன தவறு. அந்த எதார்த்தமான கருத்தால் எதிர்க்கட்சி தலைவருக்கு கோபம் வருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், முதலமைச்சருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. எனவே முதல்வருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்றார்.