
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 120க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பொறுப்பேற்ற பிறகு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் கூறி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகிய பொறுப்புகளை வழங்கியதற்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு விதிமுறைகளை மீறியதாகத் துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்திருந்தனர்.
அந்த புகாரில், “நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு வழங்க வேண்டும். ஆனால் அந்த விதிமுறைகளை மீறி பொதுப் பிரிவில் உள்ள நபர்களுக்குத் துணைவேந்தர் ஜெகநாதன் இந்த பொறுப்புகளை வழங்கியுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு அவ்வாறு முறைகேடாக நியமிக்கப்பட்ட 2 பேர் வரவு - செலவு கணக்குகளில் பல்வேறு போலியான பில்களை காட்டி மோசடி செய்திருப்பதாகவும் இந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நூலகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் உடற்கல்வி இயக்குநர் வெங்கடாசலம் ஆகியோரிடம் சேலம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக இந்த புகாரில் தொடர்புடையவராகக் கருதப்படும் துணைவேந்தர் ஜெகநாதனிடம் விசாரணை நடத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஏற்கனவே சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று (30.04.2025) துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாவட்ட அஸ்தம்பட்டி அருகே உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகி இருந்தார். அவரிடம் இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. முன்னதாக பல்கலைக்கழக பூட்டர் பவுண்டேஷன் அறக்கட்டளை தொடங்கிய விவகாரம் தொடர்பாகத் துணைவேந்தர் ஜெகநாதனிடம் சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இவரது ஜாமீன் மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “துணைவேந்தர் ஜெகநாதன் காவல் துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கலாம்” எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதே சமயம் வரும் மே மாதம் 19ஆம் தேதியுடன் (19.05.2025) துணைவேந்தர் ஜெகநாதன் பணி ஓய்வு பெற உள்ளதும் கவனிக்கத்தக்கது.