
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கடந்த 06.04.2021 அன்று காலை 07.00 மணியளவில் தொடங்கி, இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது, வேளச்சேரியில் (நந்தினி மருத்துவமனை அருகில்) 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் தூக்கிச் சென்ற நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு, வேளச்சேரில் அந்தக் குறிப்பிட்ட வாக்குச்சாவடியான எண் 92இல் மட்டும் வரும் ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என நேற்று (13.04.2021) தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவலில், ''ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7 மணிமுதல் மாலை 7 வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவின்போது இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த வாக்குச்சாவடி, ஆண் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி என்பதால் மொத்தமுள்ள 548 ஆண் வாக்காளர்களும் வாக்களிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.