Skip to main content

பழிக்கு பழி கொலை; கதிகலங்க வைக்கும் அடைமொழி ரவுடிகள்

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
Infuriating epithet raiders

                           கொலை செய்யப்பட்ட ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் 

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு (எ) சந்திரமோகன். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி சுரேஷ் (எ) சுரேஷ்(35), அவரது அண்ணன் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த ஆட்டுக்குட்டி சுரேஷ் சில காலம் வெளியூரில் தங்கி இருந்தார். இந்நிலையில் தனது மனைவியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அம்பேத்கர் நகர் சுடுகாடு அருகே உள்ள தேங்காய் குடோன் அருகே வந்தபோது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சுரேஷ் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் சுரேஷ் அவரது மனைவி இருவரும் கீழே விழுந்தனர். பின்னர், 5 பேர் சூழ்ந்து கொண்டு, சுரேஷை சரமாரியாக வெட்டினர். தடுக்கச் சென்ற அவரது மனைவிக்கும் காலில் வெட்டு விழுந்தது. இதில் சுரேஷின் தலைப்பகுதி முழுவதும் சிதைக்கப்பட்டது.

வெட்டுப்பட்ட சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பழிக்குப்பழியாக ஆட்டுக்குட்டி சுரேஷ் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து திருவரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தார். திருவரங்கம் கீழவாசல் சக்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 28), திருவானைக்காவல் சக்தி நகரைச் சேர்ந்த ஜம்பு என்கிற ஜம்புகேஸ்வரர் (வயது 36), திருவரங்கம் ஆர்.எஸ்.சாலை சவேரியார் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த  விமல் என்கிற விமல் ராஜ் (வயது 24), திருவரங்கம் தளவாய் தெரு கீழவாசல் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்கிற சூரிய பிரகாஷ் (வயது 31), திருவரங்கம் டிரைனேஜ் தெரு கீழவாசல் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து ஐந்து அரிவாள்கள் கைப்பற்றப்பட்டது.

ROWDY

                                                                சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி  ஜம்புகேஸ்வரன்

இந்நிலையில் போலீசார் கஸ்டடியில் இருந்த ரவுடி ஜம்பிகேஸ்வரன் தப்பியோட முயன்ற நிலையில் போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். முன்னதாக கைது செய்யப்பட்ட ஜம்புகேஸ்வரன் 15 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் தொடர் விசாரணைக்காக இன்று மாலை திருவானைக்காவல் பகுதிக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை தாக்கிவிட்டு ஜம்புகேஸ்வரன் ஓட முயன்றார். உடனடியாக காவல் ஆய்வாளர் வெற்றிவேல் ஜம்புகேஸ்வரனை சுட்டு பிடித்துள்ளார். தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் ஜம்புகேஸ்வரன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காயமடைந்த காவல்துறை உதவி ஆய்வாளரும் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீபமாக சென்னையில் காக்கா தோப்பு பாலாஜி, சீசிங் ராஜா என இருவர் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் திருச்சியில் தலைவெட்டி சந்த்ரு என்ற ரவுடியின் கொலையில் தொடர்புடைய ஆட்டுக்குட்டி சுரேஷ் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டு, அந்த வழக்கில் தப்பியோட முயன்ற ரவுடி சுட்டு பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்