சில மாதங்களுக்கு முன்பாக கால்நடைதுறை அமைச்சரும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தலைவருமான உடுமலை ராதா கிருஷ்ணன் அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் பல ஆயிரம் கேபிள் கனெக்ஷன் வைத்துள்ளார் என்றும் மேலும், எடப்பாடி அமைச்சரவையை சங்கடத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் பேசியதாகவும் கூறி தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மணிகண்டனை அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.
தற்சமயம் அந்த துறையை ஆர்.பி.உதயகுமார் கூடுதலாக கவனித்து வருகிறார். அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதிலிருந்து வெளியில் தலைகாட்டுவதை தவிர்த்து வந்தார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன்.
இந்நிலையில் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு இராமேஸ்வரம், திருப்புல்லாணி, கீழக்கரை ஆகிய பகுதிகளில் பரிசு பொருட்கள் வழங்கிய பைகளில் இன்னும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக உள்ளதாக பைகளில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இதைகண்ட ஒருசில இளைஞர்கள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினாலும் இன்னும் அண்ணன் அதே பதவியிலதான் வளம் வராரு போல என்ன ஒன்னும் சைரன் விளக்கும், எஸ்காட் மட்டும் தான் இல்லை என பேசிக்கொண்டனர்.