கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை 15.04.2020 முதல் வழக்கம்போல் செயல்படும் எனக் கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வெ.அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "கரோனா நச்சுயிரி தாக்குதலிலிருந்து பொதுமக்களைக் காக்கும் வண்ணம் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கிலிருந்து அத்தியாவசியப் பொருட்களுக்கு, குறிப்பாக விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களைத் தொடர்ந்து நடத்துவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மணிலா மற்றும் உளுந்து, நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த விளைபொருட்களை விவசாயிகள் உரிய காலத்தில் விற்பனை செய்யும் வண்ணம் கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை துறையின் கீழ் செயல்படும் அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் விவசாயிகளின் நலன் கருதி வரும் 15.04.2020 முதல் செயல்பட துவங்கும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
எனவே, விவசாயிகள் சமூக நலன் கருதி தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய வரும்போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும், பொது இடைவெளியைக் கடைபிடித்தும் வணிகம் மேற்கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், நெல்லிக்குப்பத்திலுள்ள ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலையும் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி வரும் 15.04.2020 முதல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரும்பு விவசாயிகள் கரும்பு வெட்டும்போதும், அதனை ஆலைக்கு எடுத்து வரும்போதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சர்க்கரை ஆலையினர் மேற்கொள்ளும் வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு அளித்து நல்ல முறையில் கரும்பு அறவை மேற்கொண்டு பயன்பெறவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.