பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார்.
இந்த சட்டம் மத ரீதியாக மக்களை பிளவு படுத்துவதாக கூறி எதிர் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அது மட்டும் இல்லாமல் இந்த சட்டத்தி்ற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி மாணவர்களை காவல்துறையினர் கலைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி எதிர்கட்சிகள் பொய் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. மாணவர்களிடம் பொய்யான பிரச்சாரம் செய்ததால் ஏற்பட்ட போராட்டம் தற்போது குறையத்தொடங்கியுள்ளது என்றார்.
மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஸ்டாலின் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது என்றும், குடியுரிமை சட்டம் பற்றி தெரியாமல் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார் என்றும் தெரிவித்தார்.
பின்னர் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது கூறித்து பேசிய அவர், போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கு அதிக சேதம் விளைக்கும் நிலை உருவானால் ஆயுதங்களை சட்ட ரீதியாக பயன்படுத்துவதில் தவறில்லை. இதைத்தான் பகவத் கீதையும் சொல்கிறது என்று தெரிவித்தார்.