வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் தமிழ்நாட்டு தொழிலாளர்கள் முறையான வழி முறைகளை பின்பற்றாமல் அங்கு சென்று பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதையடுத்து தமிழக அரசின் உத்தரவின் பேரில் அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு தொழிலாளர் நல ஆணையம் சார்பில் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோருக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் பயண முன்னேற்பாடு தொடர்பான முதன்மை பயிற்சி மற்றும் கருத்தரங்கம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.
இப்பயிற்சியில் வெளிநாடு செல்லும் தமிழர்கள் அறிந்து கொள்ளும் விதமாக கடவுச்சீட்டு, கட்டணம், காப்பீட்டு பத்திரம், குடியுரிமை, முகவர்கள், தொழில், தகுதி, ஒப்பந்தம், பாதுகாப்பு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்சினைகளை கையாள்வது குறித்த வழிமுறைகள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியன குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் எளிதில் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக காணொளி காட்சி மூலமாகவும், எடுத்துரைக்கப்பட்டது.
இதில் கல்லூரி மாணவர்கள், பாஸ்போர்ட் முகவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், வெளிநாடு செல்ல உள்ளவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.