60 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. சென்னையிலிருந்து முதல் விமானமாக இண்டிகோ நிறுவனத்தின் விமானம் டெல்லி புறப்பட்டது. அதேபோல் டெல்லியில் இருந்து முதல் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. சென்னையைத் தொடர்ந்து மதுரை, கோவையிலும் பயணிகள் விமான சேவை தொடங்கியது.
பயணிகள் குறைவால் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் தூத்துக்குடியில் இன்று காலை சென்னைக்கு இயக்கப்படவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் பயணம் செய்ய 38 பயணிகள் முன்பதிவு செய்திருந்த நிலையில் கரோனா அச்சம் காரணமாக விமான சேவை ரத்தானது.
சேலத்தில் நாளை மறுநாள் முதல் ட்ரூஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமான சேவை தொடங்க உள்ளது. மே 27- ஆம் தேதி காலை 07.25 மணிக்கு சென்னை- சேலத்துக்கும், காலை 08.50 மணிக்கு சேலம்- சென்னைக்கும் விமானம் இயக்கப்படுகிறது.
சென்னைக்கு தினமும் 25 விமானங்கள் மட்டும் இயக்க வேண்டும் என்றும், கரோனா பாதிப்பு அதிகமுள்ள குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு குறைவான விமானங்களை இயக்க வேண்டும் எனவும், மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளருக்குத் தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.