Skip to main content

பயணிகள் நிழற்குடையில் மீட்கப்பட்ட குழந்தை; தத்தெடுக்க விரும்பும் அ.தி.மு.க. பிரமுகர்...

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
incident in keeramangalam

 

 

கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பயணிகள் நிழற்குடையில் இருந்து நேற்று முன்தினம் மீட்கப்பட்ட குழந்தையை தத்தெடுக்கும் முயற்சியில் அ.தி.மு.க பிரமுகர் ஈடுபட்டுள்ளார்.
 

நிழற்குடையில் குழந்தை:

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் ஆலடிக்கொல்லை பஸ் நிறுத்தம் பயணிகள் நிழற்குடையில் நேற்று முன்தினம் காலை ஒரு பையில் அழகான ஆண்குழந்தை ஒன்று இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மீட்டு அதிகாரிகள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையை நிழற்குடையில் வைத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கீரமங்கலம் தெற்கு வட்ட கிராம நிர்வாக அலுவலர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த புகார் குறித்து விசாரனை செய்து வருகின்றனர்.

 

தத்து கேட்கும் அ.தி.மு.க பிரமுகர்:

இந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்ட தகவல் அறிந்து கீரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரும் தாங்கள் குழந்தையை வளர்ப்பதாக வந்து கேட்டனர். ஆனால் குழந்தை பாதுகாப்பு கருதி குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள கரம்பக்காடு ஜெமின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் அ.தி.மு.க பிரமுகருமான குள.சண்முகநாதன் அந்த குழந்தையை வளர்க்க ஆர்வமாக உள்ளதால் அந்த குழந்தையை தன்னிடம் தத்து கொடுக்க ஆவண செய்ய கோரி முதலமைச்சர், துணை முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு முகநூல் வழியாக கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொலைபேசியில் பேசியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

இது குறித்து சண்முகநாதன் கூறும்போது.. நேற்று (நேற்று முன்தினம்) அந்த குழந்தையை பார்த்தது முதல் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு குழந்தையை தத்தெடுக்க முன்வந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மற்றும் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். மேலும் அமைச்சரிடம் இந்த கோரிக்கை குறித்து போனில் பேசியுள்ளேன். இதனைத் தொடர்ந்து இன்று வியாழக்கிழமை மாவட்ட கலெக்டரை பார்த்து கோரிக்கை மனுவும் கொடுக்க இருக்கிறேன் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்