ஈரோட்டில் இன்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாநிலங்களவை எம்பியுமான இல.கணேசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் பேசும் போது,
"தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பை பார்த்து, தேர்தல் முடிவுகளே வந்து விட்டது என்ற பரபரப்பு மக்களிடையே காண முடிகிறது. எல்லாக் கருத்துக்கணிப்புகளும் மத்தியில் பாஜக அரசு அமையும் என்று தெளிவுபடச் சொல்லியுள்ளனர். இது நிச்சயம் நடக்கும். தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த கருத்துக்கணிப்புகள் மாறுபாட்டு வரும். இரு கட்சிக் கூட்டணிக்கும் சரிபாதி வரலாம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு அடிப்படியில் திமுக பெருமைப்பட எதுவும் இல்லை. திமுகவிற்கு ஆதரவு பெருகி விட்டது என்று அர்த்தமில்லை. அதிமுகவிற்கு பாடம் புகட்டுவேன் என சவால்விட்டு, எல்லாத் தொகுதியிலும் டி.டி.வி.தினகரன் அமமுக வேட்பாளர்களை நிறுத்தியதால், அதன் காரணமாக, அதிமுகவிற்கு கிடைக்கும் வாக்குகள் சற்று குறையலாம். அது திமுகவிற்கு கிடைத்த வாக்குகளை விடக் குறைவாக இருந்தால் தோல்வி வரலாம். எனவே, திமுக இதில் பெருமைகொள்ள எதுவும் இல்லை. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு இழப்பு ஏற்பட்டாலும் நாடு முழுவதும் உள்ள கூட்டணிக் கட்சிகள் அதை சரி செய்யும். இந்த தேர்தலில் காங்கிரஸ் வீழ்ச்சி அடையும் என்பது உறுதி.
மோடி, குஜராத்தில்தான் செய்த சாதனைகளைச் சொல்லி, சென்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றார். தற்போது பொதுமக்களிடம் நெருங்கிப் பேசி வருகிறார். ஒரு மக்களவைத் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் மத்திய அரசால் பலன் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்த 44 தொகுதிகள் கூட கிடைக்காது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கு கடைசிக்காலம். அதிமுகவிற்கான வாக்குகள் குறைந்து. அக்கட்சி தோல்வி அடைந்தால், அமமுக தலைவர் தினகரன் வேண்டுமானால பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இதனால் திமுகவிற்கு வேண்டுமானால் பலன் கிடைக்கலாம்.
தமிழகத்தில் திமுகவைவிட அதிமுக பலம் வாய்ந்த கட்சி. சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பாஜகவினரை பிரச்சாரத்திற்கு கூப்பிடவில்லை என்பது தவறானது. எல்லா இடங்களிலும் பாஜகவினர் ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளனர். காங்கிரஸ் என்பது காலி பெருங்காய டப்பா. இப்போது கூட காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்றே எதிர்கட்சிகள் கருதவில்லை. தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியைச் சேர்க்க தயாராக இல்லை என எதிர்கட்சிகள் ஒதுக்கிவிட்டன. அதேபோல், ராகுலை பிரதமராக தேர்வு செய்ய எந்த கட்சியும் தயாராக இல்லை.
கமல் தனக்கு தெரிந்த கருத்துகளை எல்லா இடங்களிலும் பேசுவது எப்படி பொருத்தமாகும்? அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்கும் காந்தி கொலைக்கும் என்ன சம்மந்தம்? என்று புரியவில்லை. அதனை அவர் தவிர்த்து இருக்க வேண்டும். பாரத நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் மிகக்குறைவு. நாம் பெருவாரியாக பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். எனவே, நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் எங்கு உள்ளது என விஞ்ஞான நிபுணர்கள் நிலத்தடியில் உள்ள எரிவாயு குறித்து ஆய்வு செய்ய இதற்கு முந்தைய அரசே கொள்கை முடிவு எடுத்துள்ளது.கேரளாவில் நிலத்தடி வழியாக இல்லாமல், சாலையோரமாக கொண்டு செல்கின்றனர். இது ஏற்கனவே கொடுக்கப்பட்ட திட்டம். இதில் மத்திய அரசைக் குறைசொல்வதில் பயனில்லை. இருப்பினும், விவசாயிகளுக்கு பாதகமில்லாமல் பேசித் தீர்க்க வேண்டும்.
பிரதமர் உடையணிவது அவரது தனிப்பட்ட விஷயம். அவர் எந்த மாதிரி உடை அணிய வேண்டும் என்று சொல்ல உரிமை இல்லை. கடந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் 1 எம்பி வெற்றி பெற்றார். தற்போது அதை விட கூடுதலாக கிடைப்பது பாஜகவிற்கு வெற்றியே. நாங்கள் போட்டியிடும் ஐந்திலுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
தேர்தல் முடிவால் மாநில பாஜக திருமதி தமிழிசை தலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாது. கட்சியின் விதிமுறைகளின்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றங்கள் வரும். தோல்விக்கு ஒரு தனிநபரை பொறுப்பாக்க முடியாது என கூறினார்.