புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் மாணவர் சேர்க்கையில் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு அளிக்காத மத்திய அரசு மற்றும் ஜிப்மர் நிர்வாகத்தை கண்டித்தும், ஜிப்மரில் மருத்துவ படிப்பிற்காக போலி சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்தக்கோரியும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாணவர்களின் சான்றிதழை ஆய்வு செய்யும் வரை கலந்தாய்வை நடத்தக்கூடாது, ஜிப்மர் மருத்துவமனையில் எழுத்தர் மற்றும் செவிலியர் பணியிடங்களுக்கு புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் கோரிமேடு காவல் நிலையம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது ஜிப்மர் எதிரே உள்ள சாலையில் போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அங்கேயே சிறிது நேரம் மத்திய அரசு மற்றும் ஜிப்மர் நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அனைவரையும் கைது செய்தனர். சமூக அமைப்புகளின் போராட்டம் காரணமாக புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.