சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் மீண்டும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே ஐந்து கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவு எட்டப்படவில்லை. இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் மீண்டும் பிப்ரவரி 21 ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ‘ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தையின் போது ஏழாம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டது. அதற்கு காரணம், உச்சநீதிமன்றத்தில் ஓய்வு பெற்றவருடைய பஞ்சப்படி தொடர்பான வழக்கு வருகிறது என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் ஏழாம் தேதி அடுத்த பேச்சுவார்த்தை என்று தொழிலாளர் துறையும் சொன்னது. நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகத் தெளிவாக ஓய்வூதியர்கள் உடைய நிலுவையில் இருக்கக்கூடிய பஞ்சப்படியை எல்லா வகையிலும் அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்துவிட்டது. ஆகவே அரசு உடனடியாக எந்த தாமதமும் இல்லாமல் ஓய்வூதியர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கக்கூடிய பணத்தையும், மற்றவர்களுக்கு நிலுவையில் இருக்கின்ற பணத்தையும் உடனடியாக செட்டில் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். தாமதப்படுத்தி கொண்டிருந்தால் மீண்டும் இங்கு பிரச்சனை தான் உருவாகும் என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறோம். இதை அரசுக்கு எடுத்துச் சென்று தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்'' என்றனர்.