நேற்று தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுவர். இதனால் 2356.67 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பச்சை அரிசி மற்றும் சர்க்கரை, 1000 ரூபாய் ரொக்கம் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம் பெறாதது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே தர்மபுரி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெல்லம், மண்பானை உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து அரசு கொள்முதல் செய்து பயனாளிகளுக்கு வழங்கினால் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளும், தொழிலாளர்களும் பயன் பெறுவர். இதனால் அழிந்து வரும் மண்பாண்டம் செய்யும் தொழில் போன்றவை மீட்கப்படும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில் இந்தமுறை பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாகத் தர்மபுரியில் பல இடங்களில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், ''ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் செலவு செய்தும் போதிய வருவாய் இல்லை. இந்த வருடம் பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு இடம்பெறும் எனக் கருதி செங்கரும்பு விளைவிப்பதில் ஆர்வம் இருந்தது. ஆனால் அதை இந்த வருடம் நீக்கியதால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பாக இருக்கிறது. அதனால் வியாபாரிகள் கரும்பை குறைந்த விலைக்குக் கேட்கிறார்கள். ஜோடி 60 ரூபாய்க்கு விற்றால்தான் எங்களுக்குக் கட்டுப்படியாகும். அரசாங்கம் ஏதாவது முயற்சி செய்து விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்க முயற்சி செய்தார்கள் என்றால் பண்ணையம் செய்த செலவை வேண்டுமானால் எடுக்கலாம்'' என வேதனை தெரிவிக்கின்றனர்.