புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு வாங்கப்பட்டுள்ள புதிய ரூ.50 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை கடத்த முயற்சித்தால் மக்களை திரட்டி போராடுவேன் என்று திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் சுகாதாரதுறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையில் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி பெயரால் தொடங்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை நல்ல முறையில் செயல்பட்டு வந்த நிலையில் மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டதும் நகரின் மையப்பகுதியில் இருந்த மாவட்ட மருத்துவமனைக்கு மூடுவிழா நடத்தப்பட்டு முதல் பெண் மருத்துவரின் பெயரும் மறைக்கப்பட்டு வருகிறது.
அதனால் மாவட்ட மருத்துவமனையாக ஆலங்குடி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் ஆலங்குடி தொகுதி திமுக வசம் உள்ளதால் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அதனால் அறந்தாங்கிக்கு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்வதாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. அங்கு உள்ள சமஉ வும் அமமுக ரெத்தினசபாபதி என்பதால் அறந்தாங்கியிலும் அதற்கான பணிகள் நடக்கவில்லை.
இந்த நிலையில் ஆலங்குடி சுற்றியுள்ள சுமார் 200 கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு உடல்நலக் கோளாறு என்றால் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சமீப காலமாக போதிய மருத்துவ உபகரணங்களும் மருத்துவர்கள், செவிலியர்கள் டெக்னீசியன்கள் இல்லாமல் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் உள்பட அனைவரையும் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அங்கு சரியான கவணிப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டகள் எழுந்ததால் ஆலங்குடி அரசு மருத்துவமனையை சீரமைக்க வேண்டும் மருத்துவ கருவிகள் வழங்க வேண்டும் என்று ஆலங்குடி திமுக சமஉ மெய்யநாதன் உள்பட கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதம் முன்பு ரூ. 50 லட்சம் மதிப்புள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் உள்பட பல இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய இயந்திரம் வைப்பதற்காக ஒரு கட்டிடத்தில் தனி அறை வண்ணம் தீட்டப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருந்த நிலையில் விலை உயர்ந்த அந்த இயந்திரத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்ல சுகாதார துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இன்று ஆலங்குடி திமுக எம் எல் ஏ மெய்யநாதன் மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு செய்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது.. ஆலங்குடி அரசு மருத்துமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் மறுத்துவிட்டார்கள். ஆனாலும் தொகுதி மக்கள் பயனடைய வேண்டும் என்று மருத்துவர்கள், உபகரணங்கள், வேண்டும் என்றும் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும என்றும் கோரிக்கை வைத்தேன். அதன் பிறகு ரூ.50 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது அதை வேறு இடத்திற்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ கடத்தி செல்ல திட்டமிட்டள்ளனர். ஆகவே தான் இன்று ஆய்வு செய்தேன். இந்த இயந்திரத்தை சில நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் இல்லை என்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி திறக்க வைப்போம் என்றவர்.
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக கொண்டு சென்றால் அலட்சியமாக செயல்படுவதால் சில நாட்களுக்குள் பல உயிர்கள் போயுள்ளது. பார்த்திபன் என்ற போலிஸ்காரருக்கே உரிய சிகிச்சை இல்லை என்பதால் நல்ல இளைஞரின் உயிர் போய்விட்டது. இந்த அலட்சிய போக்கை சுகாதாரதுறை அமைச்சர் கவணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் ஆலங்குடிக்கு வந்துள்ள இயந்திரத்தை வேறு ஊருக்கு வந்தது மாற்றி இறக்கிவிட்டதாக காரணம் சொல்ல தயாராகி உள்ளார்கள். இன்னும் சில நாட்களில் சுகாதார துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தான் என்றார்.