கோடை நகரமான கொடைக்கானல் நகரில் நடைபெற்று வரும் குளுகுளு சீசனை முன்னிட்டு கோடை விழா பிரையண்ட் பூங்காவில் அறுபதாவது மலர் கண்காட்சி தொடங்கியது. இதற்காக சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பல்வேறு வண்ணங்களில் ஆன காரனேசன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் மற்றும், பூக்களால் உருவாக்கப்பட்ட அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன.
இந்த மலர் கண்காட்சியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து கோடை விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமை வைத்தார். எம்.பி.க்கள் வேலுச்சாமி, ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் வரவேற்றார்.
இவ்விழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, "முன்னால் முதல்வர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் மலைப்பகுதிகளுக்கு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விவசாய பயிர்களை சந்தைப்படுத்த எளிமையாகி உள்ளது. அத்துடன் மேல்மலை பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி மூன்றே நாட்களில் வழங்கப்பட்டது. மலைகளின் ராணியாக ஊட்டி திகழ்ந்தாலும் அதற்கு வயதாகி விட்டது. கொடைக்கானல் என்றும் இளவரசியாக திகழ்ந்து வருகிறார். அதற்கு இங்கு நிலவும் பருவ சூழ்நிலையும் பழைய தோற்றம் இயற்கை வளம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என சொர்க்க பூமியாக திகழ்கிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீருக்கு கூட செல்லாமல் இங்கு வருகை புரிவது குறிப்பிடத்தக்கதாகும், சிறப்புடைய இங்கே கூட்டுறவுத் துறை மூலமாக ஆராய்ச்சி படிப்பு படிப்பதற்காக சுமார் 108 கோடி ரூபாய் செலவில் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. அது விரைவில் திறக்கப்படும்.
கொடைக்கானல் பகுதிக்கு நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. இதனை தீர்ப்பதற்காக நகருக்கு மாற்றுச்சாலை ஒன்றை விரைவாக தேர்வு செய்து தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்து விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருவதுடன் அதிக விலைக்கும் கொள்கை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தோட்டக்கலைத் துறைக்கு சிறந்த மாவட்டங்களாக திண்டுக்கல்லும் தேனியும் செயல்படுகிறது. கேட்டது அனைத்தும் கிடைக்கும் அரசாக திகழ்வதால் நல்லாட்சி நடைபெற்று வரும்" என்று கூறினார்.
அதுபோல் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும் போது, “திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு காலகட்டங்களில் அதிக அளவு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ளது போல் கொடைக்கானல் நகரிலும் அடுத்த ஆண்டு முதல் புகழ்பெற்ற ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்படும். மக்கள் தொகை மற்றும் வாகன எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பழைய சாலைகளையே பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் புதிய வழித்தடத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் பகுதியில் விளையும் மலைப்பூண்டுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளது. எனவே இதன் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டு சுமார் 700 ஹெக்டேரில் அதை பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பாச்சலூர் பகுதியில் ஸ்ட்ராபெரி சுமார் ஐந்து ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. தேர்தல் நேர வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல்வர் தலைமையில் 350க்கு மேற்பட்ட ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு இரண்டு ஆண்டு காலத்தில் சுமார் 6000 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். மக்களுக்காக உழைப்பதால் வெற்றி பெற்றோம்” என்று கூறினார்.
அது போல் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், “சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிக்கைகள் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேல்மலை பகுதியில் தமிழ் கேல்கையிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் கேரள மாநில எல்லை உள்ளது. இந்த சாலையினை மீண்டும் அமைத்தால் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும். பழனி நகரில் இருந்து திருப்பதி செல்வதற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். இதற்காக புதிய வால்வோ பஸ்கள் வாங்கப்படும்” என்று கூறினார்.
அமைச்சர் சக்கரபாணி பேசும் போது, “வேளாண்மைத் துறையின் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் குளிர்பான கிட்டங்கி 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் திறக்கப்படும் பழனி கொடைக்கானல் இடையே ரோப் கார் திட்டம் அதனை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதிக்கு சுமார் 56 லட்சத்து 775 சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும்” என்று கூறினார்
ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “கொடைக்கானல் தோன்றி 178-வது ஆண்டு நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கொடைக்கானல் பகுதிக்கு சுமார் 250 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் வருகிறது. இதில் நகராட்சி பகுதியில் மட்டும் சுமார் 79 கோடி ரூபாய் செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 500 ஆண்டுகள் பழமையான வெள்ள கவி கிராமத்திற்கு சாலை வசதி செய்ய முயற்சி செய்யப்பட்டு இதுவரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் நபார்டு திட்டத்தின் மூலம் விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பழமையான சின்னூர் பெரியூர் கிராமங்களுக்கும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியின் பல்வேறு இடங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தடுக்க உயர் கோபுரம் மின் கம்பங்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நகருக்கு தினசரி குடிநீர் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கொடைக்கானல் நகருக்கு வருகை தரும் அனைத்து சாலைகளும் பெருமாள் மலையிலிருந்து ஒரு வழிச்சாலையாக மாறுவதால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே கோவில்பட்டி பேச்சு பாறை வழியாக மாற்று சாலை நடத்த ஆய்வு நடத்தி விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
இந்த விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் மூர்த்தி, தோட்டக்கலை மற்றும் மலைப் பெயர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திட்ட இயக்குநர் திலகவதி, கொடைக்கானல் நகர சபை தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், நகரச் செயலாளர் முகமது இப்ராஹிம், கீழ் மலை ஒன்றிய செயலாளர் கருமலைப் பாண்டி, ஒன்றிய குழு தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், துணைத் தலைவர் முத்துமாரி சுரேஷ் பாண்டி, வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், வடகவுஞ்சி ஊராட்சித் தலைவர் தோழி ஆனந்தன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள், கட்சி பொறுப்பாளர்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.