அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த சூரப்பா, கடந்த 11ஆம் தேதியோடு ஓய்வுபெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்திருந்த நிலையில், துணைவேந்தரின் மூன்று ஆண்டு பதவிக் காலம் முடிவடைந்ததால், அவர் கடந்த 11ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
சூரப்பா கர்நாடகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில் அவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்தே சர்ச்சைகள் தொடர்ந்தன. அதேபோல் அவர் மீது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில், ''தற்பொழுது நான் துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றதால் விசாரணை ஆணையம் என்னை விசாரிக்க முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல. தமிழக அரசு, அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என்று அறிவித்த முடிவை அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த நான் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்குப் பழிவாங்கும் நோக்கில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது'' என சூரப்பா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
துணைவேந்தராக இருந்தபோது அவருக்கு அரசு சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த குடியிருப்பை அவர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. “குடியிருப்பை உடனடியாக காலி செய்ய முடியாது. தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் தங்க உள்ள நிலையில், குடியிருப்பைக் காலி செய்ய இரண்டு மாதமாவது அவகாசம் தேவை. இதற்கு முன் துணைவேந்தராக இருந்தவர்கள் அரசு ஒதுக்கிய குடியிருப்பை உடனடியாக காலி செய்யவில்லை. பிற முன்னாள் துணைவேந்தர்களுக்குத் தரப்பட்ட சலுகை எனக்கும் தரப்பட வேண்டும்” என நேற்று சூரப்பா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.