பெரியாரை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. அதேநேரம் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 3000 பேர் திமுகவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர். இணைகின்றனர். அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியில் இருந்து ஒரு மண்டல செயலாளர், 6 மாவட்ட செயலாளர்கள் என பலர் திமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''பெரியாரை தாக்கிவர்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இன்னும் நிறைய பேர் திமுகவில் இணைய தயக்கம் காட்டுகின்றனர். அவர்களையும் நீங்கள் இணைக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வென்று காட்ட வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து திமுக தலைவர் மாநில மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''நாம் யாரிடத்தில் இருக்க வேண்டும்; எந்த கொள்கையை ஏற்று பணியாற்ற வேண்டும் என்ற நிலையில் ஒரு சிறப்பான முடிவெடுத்து இன்று திமுகவில் இணைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இணைத்து கொண்டிருக்கக்கூடிய நீங்கள் எல்லாம் இங்கு வந்திருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பெருமைப்படுகிறேன். உங்களை எல்லாம் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
மறைந்தாலும் உள்ளத்தில் குடியிருக்கும் கலைஞர் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன். திமுக என்பது நேற்று முளைத்த காளான் இல்லை. 1949 ஆம் ஆண்டு வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா உருவாக்கிய போது சொன்னார் 'திமுக என்பது ஆட்சிக்கு வரவேண்டும் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல. மக்களுக்கு பணியாற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்திற்காக உழைத்திட வேண்டும் என்ற உணர்வோடு தான் இந்த இயக்கம் துவக்கப்படுகிறது' என்று அண்ணா உறுதி எடுத்துக் கொண்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
1947 தொடங்கி 1957 ஆம் ஆண்டு தேர்தலுக்கு வந்தோம். ஆனால் இப்பொழுது கட்சியை ஆரம்பித்தவர்கள் எல்லாம் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்கிறார்கள். நாங்க தான் அடுத்த ஆட்சி, நங்கள் தான் அடுத்த முதல்வர் என்று அனாதை நிலையில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் பிதற்றி கொண்டிருக்கிறார்கள். அவர் யார்? எப்படிப்பட்டவர்? அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்டுவதற்கு நான் தயாராக இல்லை அதுதான் உண்மை. அவர்கள் பெயரைச் சொல்லி இந்த மேடைக்கு உரிய அங்கீகாரத்தை, மேடைக்குரிய கௌரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்புகிறேன் அதுதான் உண்மை.
நானாக இருந்தாலும் சரி, உதயநிதியாக இருந்தாலும் சரி, துரைமுருகனாக இருந்தாலும் சரி மாற்று கட்சி என்றுதான் சொல்வோம். அந்த கட்சியினுடைய பெயரை கூட சொல்ல வாய் வரவில்லை. காரணம் எத்தனையோ கட்சிகள் இருக்கிறது. எத்தனையோ கட்சிகளின் பெயர்களை சொல்கிறோம். ஆனால் அந்த கட்சியின் பெயரை சொல்ல மறுப்பதற்கு காரணம் என்ன? உண்மையிலேயே ஒரு அரசியல் கட்சியாக இருந்து மக்களுக்கு பாடுபட்டு உழைக்கக் கூடிய கட்சியாக இருந்து. உண்மையிலேயே தமிழனுக்காக பாடுபடும் கட்சியாக இருந்தால் சொல்லலாம். பேசிட்டுக்கொண்டு நாடகம் நடத்திக்கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் நான் அடையாளம் காட்ட விரும்பவில்லை'' என்றார்.