சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் 'சமத்துவ விருந்து' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.
பாமக அன்புமணியின் என்.எல்.சி எதிர்ப்பு போராட்டம் குறித்த கேள்விக்கு,
''பாமக தலைவர் அன்புமணி கூட விலை நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்எல்சி வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு. நாளைக்கு உள்நாட்டிலேயே அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என கணிப்புகள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் விளைநிலங்களை அபகரித்து அந்த இடத்தில் என்எல்சி சுரங்கம் அமைப்பது அடுத்தகட்ட மிகப்பெரிய ஆலைகளுக்கு எல்லாம் முன்னுதாரணமாக அமைந்துவிடும். உடனடியாக மத்திய அரசு அதனை நிறுத்த வேண்டும். அதை நாங்களும் வலியுறுத்த ஆசைப்படுகிறோம்'' என்றார்.
தமிழக பாஜக நடத்தும் யாத்திரை குறித்த கேள்விக்கு,
''அந்த கட்சியில் யாத்திரை நடத்தலாமா கூடாதா என்று நான் சொல்ல கூடாது. அவரவர்கள் கட்சியை அவர்கள் வலுப்படுத்துவதற்காக பிரச்சாரத்தை கொண்டு போகிறார்கள். 2024 பாராளுமன்ற தேர்தல் வருகிறது. அந்த பாராளுமன்ற தேர்தலுக்காக முன்னோட்டமாக மக்களுடைய மனநிலை அறிவதற்காக சென்று இருக்கலாம். கருத்துக்கணிப்பு கேட்கலாம். அவர்களின் நிலைப்பாடு என்ன, மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை கேட்பதற்கான பயணமாக இதை எடுத்துக் கொள்ளலாம். அண்ணாமலை மத்திய அரசிடம் அந்த என்எல்சி திட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொள்ளலாம்'' என்றார்.
விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சரத்குமார்,
''இந்த கேள்விக்கு பலமுறை நான் பதில் சொல்லிவிட்டேன். இந்த நாட்டில் இருக்கின்ற எல்லாருமே அரசியலுக்கு வரலாம். கல்வியாளர்கள் பாடத்திட்டங்களில் 14 வயது பசங்களும் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அது ஒரு மாற்றத்தை கொண்டு வரும். ஜனநாயகம் என்ன; தேர்தல் முறைகள் என்ன; வருங்காலத்தில் நீங்கள் தலைவராக வரும் பொழுது நீங்கள் பாராளுமன்றத்திற்கு செல்லும் பொழுது சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது அரசியலை தெரிந்து கொள்ளுங்கள். அதுபோல தான் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலுக்கு வருபவர்கள் எல்லோரையும் வரவேற்கிறோம்.
1996 ஆம் ஆண்டிலிருந்து நான் அரசியலில் இருக்கிறேன். கலைஞர்களிலேயே நான் தான் மூத்தவன். 1996-ல் அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்தவன் நான். அன்றிலிருந்து இன்னைக்கு வரை நான் அரசியல் களத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை பொறுத்தவரை அந்தந்த இயக்கங்கள் மற்ற கட்சியில் இருந்து வருகிறார்கள் அல்லவா, அவர்களை வேண்டாம் என்று சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். இங்கிருந்து அங்க வரலாம் அங்கிருந்து இங்கு போகலாம் என்றால் அது சரியாக வராது என்பது என்னுடைய கருத்து. ஒவ்வொரு இயக்கமும் எதற்காக துவங்கப்படுகிறது என்பதில் உறுதியாக இருந்தால் மக்களுக்கு நல்லது'' என்றார்.
.