தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம் 2020 நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் உறிஞ்சும் பணிகளுக்கான ஏலத்தை தமிழ்நாடு அரசின் வேண்டுகோளுக்கிணங்க ரத்து செய்ய ஒன்றிய அரசு பரிசீலிக்கிறதா? என்று மக்களவையில் திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி. எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ் தெலி, ஆகஸ்ட் 2ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அந்தப் பதிலில், “இந்திய அரசாங்கம் 2021 ஜூன் 10ஆம் தேதி, கண்டுபிடிக்கப்பட்ட சிறிய அளவிலான நிலப்பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணிக்காக மூன்றாவது சுற்று ஏலத்தை அறிவித்தது. இந்தியா முழுவதும் 75 இடங்களில் 13,204 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கான 35 ஒப்பந்தங்களைக் கோரி இந்த ஏலம் அறிவிக்கப்பட்டது. இவற்றில் இரு பெட்ரோலிய சுரங்க குத்தகையை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், புதுக்கோட்டை வடத்தெரு ஆகிய பகுதிகளில் போடப்பட்டிருக்கிறது. இந்த இரு பெட்ரோலிய சுரங்க குத்தகைகளும் 2007 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்டது. எண்ணெய் வயல்கள் முறைப்படுத்துதல் விரிவாக்கல் சட்டம் 1948 , பெட்ரோலிய இயற்கை எரிவாயு விதிகள் 1959 ஆகியவற்றின் கீழ் இவை வழங்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் எந்த ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுத்தல் பணியும் நடைபெறவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் அமைச்சர் ரமேஷ் தெலி.