வாயில்லா ஜீவனும் உயிரினம் தானே என்று கருதவில்லை. விலங்குகளில் நன்றியுள்ள பிராணி என்றால் நமது நினைவுக்கு நொடியில் எட்டுவது நாய். உரிய நேரத்தில், வீட்டுக்கு வரும் கொள்ளையர்களைக் கண்டதும் உஷாராகி தன் எஜமானரை எழுப்புகிற 24 மணி நேர நன்றியுள்ள சேவகன். ஆன்மீகப்பற்றாளர்களோ அதனை ஆண்டவனுக்கு இணையாக பைரவர் என்றழைத்து அவரை வணங்கினால் தோஷம் நீங்கும் என்பர். அப்பேர்ப்பட்ட நன்றிக் குணம் கொண்ட நாய்க்குத்தான் வளைகுடா நாட்டில் பொது வெளியில் அளிக்கப்படும் தண்டனையைப் போன்று சில கல் நெஞ்சக்காரர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நகரையொட்டியுள்ள பேய்க்குளம் ஊரில் நட்ட நடு வீதியில் நடத்தியிருக்கிறார்கள்.
பேய்க்குளத்தைச் சேர்ந்த சிலர் தங்களின் ஆடுகளை அந்தப் பகுதியின் வயல் வெளியில் மேய்ச்சலில் விட்டிருக்கிறார்கள். அது சமயம் அந்தப் பக்கமாய் வந்த நாய் ஒன்று அந்த ஆட்டினைக் கடித்திருக்கிறது இதனால் ஆத்திரமானவர்கள் அந்த நாயை அடிக்கவிரட்டிய போது, அது அவர்களிடமிருந்து தப்பித்து ஊருக்குள்ளிருக்கும் டாஸ்மாக் கடையில் பக்கம் பதுங்கியது. அதனைச் சுற்றி வளைத்து ஆடு வளர்க்கும் மூன்று பேர்களும் கம்பாலும், தடியாலும் உடலிலும் மண்டையிலும் ஈவு இரக்கமில்லாமல் வெளுத்து வாங்கியதில் கதறக் கதற துடிதுடித்து உயிரை விரட்டிருக்கிறது. நாயை அவர்கள் அடிக்கும் போது பார்த்த சிலர் கூட அதனைத் தடுக்கவில்லையாம். இந்தக் கொடூரத்தைக் கண்டு பதறிய யாரோ ஒருவர் அந்தக் காட்சியை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் வெளியிட அது வைரலாகி இருக்கிறது. போலீஸ் சும்மா இருக்குமா... இந்தக் காட்சியைக் கண்ட மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரின் உத்தரவையடுத்து சாத்தான்குளம் போலீசார் அந்தப் பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து, சுந்தரம் இரண்டு பேரைப் பிடித்து விசாரித்து அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
வழக்கம் போல் மனிதரிடம் தன் நன்றி விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இயல்பாய் வாலை ஆட்டுகிற நாய், தன்னை எதற்காக அடிக்கிறார்கள் என்று தெரியாமலே தனது வாலை ஆட்டிக் கொண்டிருந்தது பரிதாபத்தின் உச்சம்.