சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தநிலையில், இதற்காக மாநகராட்சி சார்பில் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அப்பணிகள் நிறைவடையாமல் உள்ள நிலையில் பள்ளங்களை தற்காலிகமாக மாநகராட்சி சார்பில் மணல் நிரப்பி மூடி உள்ளனர்.
இந்நிலையில் மழை காரணமாக மணல் சரிந்ததில் சாலைகளில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி வெளியே வைத்தது. இந்த நிலையில் முகலிவாக்கம் தனம் நகரை சேர்ந்த 14 வயது சிறுவன் தீனா அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது தெரியாமல், அந்த மின்சாரம் வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் இவ்விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையரிடம் மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.