நுண்நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மொழி பெயர்த்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது.
2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, சென்னையில் நேற்று இரவு பாஜக உயர்மட்டக்குழு மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றுப் பேசினார். அப்போது அமித்ஷா பேசியதை எச்.ராஜா மொழிபெயர்த்தார்.
பாஜக அரசின் சாதனைகளை அமித்ஷா பட்டியலிட்ட போது, மைக்ரோ இரிகேஷன் திட்டத்திற்காக ரூ.332 கோடி ஒதுக்கியுள்ளதாக கூறினார். மைக்ரோ இரிகேஷன் என்பதற்கு நுண்நீர் என்பது தான் சரியான மொழிபெயர்ப்பு. ஆனால், நுண்நீர் பாசனம் என்பதற்கு பதிலாக சிறுநீர் பாசனம் என எச்.ராஜா மொழி பெயர்த்து கூறினார். இந்த சம்பவம் அங்கிருந்த பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், எச்.ராஜா பேசயது சமூகவலைதளங்களில் வீடியோவாகவும், மீம்ஸ்களாகவும் வைரலாக பரவி வருகிறது.
Without comment pic.twitter.com/YMwEGs0lAC
— H Raja (@HRajaBJP) July 10, 2018
இந்நிலையில் தனது மொழிபெயர்ப்பு குறித்து எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில், டிக்ஸ்னரியில் மைக்ரோ என்பதற்கு அர்த்தத்தை தேடி அதனை ஸ்கிரின்ஷாட் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.