![ே்ி](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sogd_j7UM9gkGZjqRiZjmjOavwi-v8cLCVWT09Ng9a0/1648988973/sites/default/files/inline-images/fgj_11.jpg)
தனியார் மருத்துவமனையில் நோயாளியின் அறையில் புகுந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சாய்பாபா காலனியில் மிகவும் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு உடல்நலக் குறைவு காரணமாக இளைஞர் ஒருவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து அறுவைச் சிகிச்சை செய்யும் அறைக்கு இன்று காலை அழைத்து செல்லப்பட்டார். 40 நிமிட இடைவெளியில் மீண்டும் அவருடைய அறைக்கு அவர் கொண்டுவரப்பட்ட நிலையில், அறையில் அவருடைய பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்துள்ளது.
மேலும் பேக்கில் வைத்திருந்த 2 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காவல்துறையினர் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர். அதில் திருடிச் சென்றவரின் முகம் பதிவாகியுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.