Skip to main content

‘கடுமையான வார்த்தைகளைப் பொதுவெளியில் பேசுவது அழகல்ல!’ - மு.க.ஸ்டாலினுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 14/12/2020 | Edited on 15/12/2020

 

highcourt chennai

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தனக்கெதிரான இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

ஏற்கனவே ஸ்டாலினுக்கு எதிரான சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற வழக்குகளின் விசாரணை, மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது, பொதுமேடைகளில் தமிழக முதல்வர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து பப்ளிக் பிராசிகியூட்டர் நடராஜன், நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

 

ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, ‘லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பைப் பெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறுவது கண்டனத்துக்குரியது. அரசியல் ஆதாயத்திற்காக, ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும், இதுபோன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளைப் பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல.

 

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இதுபோன்று கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சனம் செய்வது, பொது மக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும், அவதூறு வழக்குகளை ரத்து செய்து வரும் நீதிமன்ற உத்தரவுகளை, தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்கி, மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்’ எனத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதி, ஸ்டாலினுக்கு எதிரான மூன்று அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

மற்ற வழக்குகளின் விசாரணையை ஜனவரி 7-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்