Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

HighCourt question to Tamil Nadu government for Tuticorin incident

 

கடந்த 2018ம் ஆண்டு மே 22 ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐஜி சைலேஷ் யாதவ், டிஐஜி கபில்குமார் சரத்கர், எஸ்பி மகேந்திரன், டிஎஸ்பி லிங்க திருமாறன், காவல் ஆய்வாளர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன், எஸ்ஐக்கள் சொர்ணமணி, ரென்னீஸ், காவலர்கள் ராஜா சங்கர், சுடலைக்கண்ணு, தாண்டவ மூர்த்தி, சதீஷ்குமார், ராஜா, கண்ணன், மதிவாணன் என பல பேர் மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தில், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.

 

இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த அந்த மனுவில், ‘நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. ஆனால், இது நாள் வரை அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தது.

 

இது தொடர்பான மனு இன்று (03-11-23) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. 

 

 

 

சார்ந்த செய்திகள்